எந்த வீட்டிலும் கதவுகள் இல்லை
கனவுகளில் நீளும்
ஜன்னல்களில் வானவில்
புன்னகை மந்திரங்கள்
கண்களில் மின்ன
அன்பெனும் ஆலாபனை தான்
எதிர்படுவோரிடமெல்லாம்
மதமற்ற மானுட தேசம்
கடவுளற்ற கண்ணிய பூமி
சாதி இல்லா சம்பவம் இது
உற்சாகம் உயிர்களிடத்தில்
உன்னதம் உள்ளம் நிறைக்க
நிமிர்ந்த நன்னடையில்
ஒவ்வொருவருக்குள்ளும்
ஒரு ஜோதி ஒரு போதி
பகைமையற்ற பளீர் சிரிப்பு
பாவங்கள் அற்ற பசுமை கண்கள்
சுடர் வீசித் திரிகிறது வீதி
சுந்தரி வந்திருக்கிறாள்
ஊரிலிருந்து...!

- கவிஜி