1.  சாவிக் கொடுத்தவுடன்

குதிக்கும், தவ்வும், நடக்கும்

குரைக்கும், முன்கால் நீட்டி

மடங்கும் பொம்மையை

ஆச்சர்யத்துடன் பார்க்கும்

மனிதனுக்கு மேலதிகாரி

அழைப்புவர செல்போனோடு

நகர்கிறான் பதற்றமாய்

 

2. வெண்பட்டு பஞ்சு பொம்மையை

காதலிக்கு தேர்வு செய்தவன்

ஏ.டி.எம் செ‌ன்று திரும்புவதற்குள் அது

இன்னொருவன் பின்னால்

வாலாட்டி சென்றிருந்தது

 

3. பிச்சைக்காரனொருவன்

பிளாட்பாரத்திலிருந்து வெறிக்கிறான்

ஷோகேஸ் பொம்மையை

நாய்போல நடந்தும், குரைத்தும்

‌ விளையா‌ட்டு காட்டுகிறான்

அவன் குழந்தைக்கு

 

4. நாற்பது வயது‌ மனிதரின்

முன் தலைகுனிந்து நடக்கும்

இள‌ம்மனைவியின்

இரண்டு கைகளிலும்

நாய் பொம்மைகள்.

 

5. வாலறுந்து உடைந்த

நன்றி கெட்ட நாயொன்று

மறுநாள் குப்பைத்தொட்டியில்

விழுந்தது சுவாரஸ்யமற்று

 

6. நடைபாதை கடைக்காரன்

தேனீரருந்தி திரும்புவதற்குள்

அவசரமாக புணர்ந்து

முடிந்திருந்தது

நாய்பொம்மைகள் இரண்டு

 

7. நாலடி நாய்பொம்மையோடு

வந்தவன் மேல்

வன்மமாய் பாய்கிறது

வீட்டில் வளர்க்கும்

விசுவாச ஜீவனொன்று


- என். விநாயக முருகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)