சிரிப்பா சிந்தனையா தெரியவில்லை
தெரிந்தவர் தெரியாதவர்
எல்லாரும் ஒன்று தான்
நண்பன் எதிரி எவனுக்கும்
புருவ வழிபாடு மாத்திரம்
பெரிய இவன் சின்ன இவன்
ஒரு வித்தியாசமும் இல்லை
முகம் மூடிய அவசர கண்களுக்கு
அரக்க பரக்க காட்சி தான்
வெயில் பிசையும் மூக்கை
சொரியக் கூட முடியவில்லை
அசுர மனம் அன்றாடம் வாய்க்கிறது
கல்லடிபட்ட காலம்
கன்னத்தில் கை வைத்திருக்க
எங்கோ நின்று விட்ட காற்றாடியில்
இன்னும் கொஞ்சம் காற்றிருக்கிறது
மறந்தும் கை கொடுப்பதில்லை
மருந்தும் கை கொடுப்பதில்லை
அன்றைய மரணத்தை
தள்ளிப் போட்ட திருப்தியில்
வீடு வந்த அடுத்த நொடி
முகம் எடுத்து மாட்டுகிறேன்
மூச்சு வாங்கப் பார்க்கிறது கண்ணாடி......!

- கவிஜி