உண்பதற்கு
நல்ல உணவுகள்
இல்லையென்றாலும்
வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறோம்...

அணிவதற்கு
நல்ல ஆடைகள்
இல்லையென்றாலும்
வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறோம்...

வாட்டும் தனிமையில்
ஆறுதல் சொல்ல யாருமில்லை
என்றாலும் வீட்டுக்குள்
முடங்கிக் கிடக்கிறோம்...

பக்கத்து வீட்டுப் பாட்டி
பசியோடு
இறந்து போனதை 
அறியாத துயரத்தோடு
வீட்டுக்குள்
முடங்கிக் கிடக்கிறோம்...

குடிநீர்க் குழாயில்
தண்ணீருக்குப் பதிலாக
காற்று வந்தாலும்,
தாகத்தோடு வீட்டுக்குள்
முடங்கிக் கிடக்கிறோம்...

எங்கள் தேசத்தின் தலைவர்களாகிய நீங்கள்
சொன்னதை எல்லாம் கேட்டு
வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கும்
எங்களுக்கு வருத்தம் எதுவும் இல்லை...
இந்தத் துன்ப நாட்களிலும்
எங்களை வைத்து
அரசியல் செய்கிறீர்களே என்பதைத் தவிர!

- மு.முபாரக்