எப்பொழுதும் அமர்ந்திருக்கும்
மரத்தின் கீழ் காத்திருந்தேன்
ஒரு பறவைக்காக
அன்று அடர்ந்த இலைகளாக
இருந்த மரம்
வெறும் கிளைகளாக
இருந்தது இன்று
இலையுதிர்க்கால துளிர்த்தலில்
உற்சாகமாக வசந்தம்
தன் கடிதத்தை
எழுதிக் கொண்டிருந்தது
அந்த மரத்தில்.
எந்தத் திசையில் இருந்தோ
கிளை அமர்ந்த பறவை
வேகமாக ஓர்
இசையையும் அந்தக் கடிதத்தில்
சேர்த்து எழுதிவிட்டு
சட்டெனப் பறந்தது
நான் அன்று சென்றிருக்க வேண்டாம்
என நினைத்துத் திரும்பினேன்
ஏமாற்றத்தோடு.
என் பார்வை பட்ட கணம் பறந்து
சென்ற பறவை
மீண்டும்
அந்தக் கடிதத்தை
எப்பொழுது வந்து
எழுதி முடித்திருக்கும்
என்ற ஏக்கத்தோடு
இன்றும் செல்கிறேன் அதே
மரத்தடிக்கு...

- ப.தனஞ்ஜெயன்