கன்னிப் பெண்கள்
இருக்கும் வீட்டில்
நெருப்பையே சேலையாக
கட்டிக் கொள்கிறார்கள்
அம்மாக்கள்

உயரிய கல்வியும் உன்னதக் கலைகளும்
பெண்களுக்கு
சிறகுகள் ஆனபோதும்
உடைகளின் கண்ணியத்தை
தீர்மானிக்கின்றன
காமக் கண்கள்

இனப்பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட
ராணி தேனீக்களுக்கும்
குடும்ப குத்துவிளக்காகும்
மனைவிகளுக்கும்
வித்தியாசம் இல்லை

மாப்பிள்ளையைக் கொண்டு வருவதில்
வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்
அப்பாக்களுக்கு இணையாக
அண்ணன்களும் தம்பிகளும்

உயிர்த்ததிலிருந்து
இன்னோர் உயிரை ஈன்றதுவரை
பெற்றோரின் தயவில்

மகள்கள் நடத்தும்
பெற்றோரின் மணிவிழாவில்
மருமகன்கள் முகம் கோணக்கூடாது
என்பதே
அம்மாக்களின் பிரார்த்தனை

- முனைவர் சி.ஆர்.மஞ்சுளா