1)
ஏழு கடவுள்கள்
முன்பு என் நிலத்திற்கு 
ஏழு கடவுள்கள் இருந்தனர்.
மாத மும்மாரி பொழிந்துகொண்டேயிருந்தது.
குரல்வளைமுட்ட ஈரம் குடித்து 
செஞ்சாந்து குதப்பிக் கொண்டிருந்தது நிலம்.
 
நெல்மணிகளையும் பொன்மஞ்சள்க்
கிழங்குகளையும், வாழை கரும்பையும்
அவர்களுக்குத் தவறாது அது படையலிடும்.
ஏழு கடவுள்களும் தங்கள் வம்சம்
பெருக்கி அங்கேயே வாழ்ந்தனர்.
வம்சம் மேலும் பெருக இடம் போதாததால் 
ஆறு கடவுள்கள் 
தத்தமது பாகங்களுடன் பக்கத்து 
நிலங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
என் நிலத்திற்கு ஒரு கடவுள் மிஞ்சினார்.
 
நிலம் அவருக்கு இருப்பதை படைத்தது.
அவரும் இயன்றதை வரமளித்தார்.
வருட மும்மாரி பொழிந்தது.
பின்னொரு நாளில் 
நான் அங்கு  உதித்தேன்.
அவருக்கான படையல்களை 
நான் திருடித் கொண்டேன்.
அவரது தியானத்தின் அமைதியைக் 
கல்லெறிந்து கலைத்தேன்.
அவர் கோபித்துக்கொண்டு
கிணற்றுக்குள் புதைந்து மறைந்துவிட்டார்.
முடிவிலா ஊற்று வற்றிப் போனது.
நிலம் பாலையானது.
 
நாங்கள் எவ்வளவு மன்றாடியும்
அவர் திரும்ப வரவேயில்லை.
அம்மா இன்றுவரையிலும் கூட 
வாரம் தவறாது நோன்பிருந்து வருகிறாள்.
அப்பா ஆடுகளை பலி கொடுக்கிறார்.
நிலம் துளிர்த்தபாடில்லை.
 
எனக்காகவோ!,அவர் இன்னும் வாராதிருக்கிறார்.
அவரிருந்த இடத்தில் இப்போதும் ஒரு கல் 
அவரது பீடமென்று சொல்லிக்கொண்டு கிடக்கிறது.
அதன்மீதுதான் நான் அமர்ந்திருக்கிறேன்.
 
பூனையின் கண்களில்
மின்னுகின்றன
விண்மீன்களையும் மிஞ்சும்
இரகசியங்கள்.
 
தேடிச்சோறு நிதம் தின்பேன்.
அன்பே...
நீ வந்தாயானால்
உனக்கும் ஒரு கவளம் தருவேன். 
 
 
2)
நம் சுவரில் விழுந்த  ஒரு
பெருவெடிப்புக்குப் பின்
நாம் இருவேறு திசைகளில்
துண்டாடப்பட்டோம்.
இணைப்பு சாத்தியமற்றுப்போனது.
பின்னொரு கணத்தில்
நினைவுத் தடத்தின்
துயர் களைய முனைந்தபோது
நீண்ட யோசனைக்குப்பின்
சேகரித்து வைத்திருந்த
உன் கடிதங்களை எரித்தேன்.
எரிந்த சுடரில்
விழிகள் மின்ன,
கவிந்த புகையில்
உன் முத்தத்தின் வாசனை.
எஞ்சிய சாம்பலில் படிந்திருந்தன
உன் சருமத்தின் மென்மையும் இளஞ்சூடும்.
விரலை ஒற்றி நாவில் வைத்தேன்.
உடல் முழுக்க
உன் பிரியத்தின் தித்திப்பு.
 
3)
சுழித்து ஓடும்
பெருநதியில்
நனையவிட்ட இலைகள்
நீந்திப்பழகி அகன்றன
தனது கிளைகளை விட்டு
 
4)
வெறுமனே
புற்களை மார்பில் சுமந்தபடி
மல்லாந்து கிடக்கிறது எனது நிலம்.
அதன் பல்லிடுக்கில் சிக்கியபடி
இளித்துக் கொண்டிருக்கிறது
என் மூதாதையின்
சிதைந்த கோவணம்.
 
- தனசேகர் பழனிச்சாமி