நிறைகண்மாயில்,
என் தோழியரோடு
விழி சிவந்தும்,
கும்மாளமிட்டிருந்தபோது

ஐந்தாம் வகுப்பில்
அருகமர்ந்தவளிடம்
சிரித்துப் பேசியதற்கான தண்டனைக்காக
ஆங்கில ஆசானிடம்
கரம் நீட்டியபோது

தாய் தந்தையரோடு,
நிற்கக்கூட இடமில்லா ரயிலில்
ஒடுங்கியபடி எங்கோ
சென்று கொண்டிருந்தபோது

வெள்ளம் வீட்டை
இழுத்துச் செல்வதை,
மாமழையில் பிள்ளைகளுடன்
நனைந்தபடி பார்த்திருக்கும்போது... என

ஒவ்வொரு விடியலிலும்
வெவ்வேறு சூழலிலிருந்து
என்னை இழுத்து
தன் உலகில்
விழிக்க வைக்கிறார்...
ஒருபோதும்
என் தனியுலகில்
புக முடியாதவர்

- கா.சிவா