நம் பால்யத்தின் சாலைகளில்
நிழல்குடையாய் நின்று
சாமரம் வீசி பூக்கள் தூவி
நம்மை வாழ்த்தும் புளியமரங்கள்.
புழுதி கவிந்தப் பாதையில்
பாடம் படித்து
பள்ளிகளில் ஓய்வெடுத்தோம்
பெரும்பாலான நாள்களில்.
சாக்குப்பைகளில் புத்தகங்கள் சுமந்து
மாட்டு வண்டியின் பின்புறம் பைகளை மாட்டிவிட்டு
தொங்கியபடி ஊஞ்சலாடியே நடந்தோம் வீடுவரை...
செங்காய் என்றால் உனக்கும்
புளியம்பிஞ்சுகள் எனக்கும் உயிர்.
நீ வேறு வீதி நான் வேறு வீதியானபோதும்
நம் மனக்காம்புகளிடையே கொத்துக் கொத்தாய்
பூத்துக் காய்த்துத் தொங்கியது
ஊரார் கல்லடிகளுக்கெல்லாம்
அறுபட்டு விழாத புளியங்காய் நேசம்.
நீ அவ்வப்போது என்னோடு காய் விட்டாலும்
உன் புளியங்கொட்டை கண்ணுக்குள்
பழுத்தே இருந்தது இனிப்புக் காய்ச்சிப் பிரியம்
பார்ப்பவர்க்கெல்லாம் புளிப்பாய்.
சாலை விரிவாக்கத்தில் புளிய மரங்களும்
கால விரிவாக்கத்தில்
நம் ஈர முத்தங்களும் துண்டாகிட
தார்ச்சாலையில் தவறி விழுந்த
காடைகளின் முட்டையென
எந்திர வாழ்வினில் நசுங்கிட
தப்பிய ஒற்றைப் புளிய மரமொன்று
அரச பயங்கரவாதம் கண்டு அஞ்சாமல்
பருவந்தோறும் பழுத்திருக்கிறது
தன்னை உலுக்கி எடுத்த
நினைவுகளோடு
கரியமில புகைபடிந்து...!

- சதீஷ் குமரன்