மரணத்தின் கவிதைகள் - 1

ஒரு பெரும் உறக்கம் ஆட்கொள்கின்றது
வலி நிறைந்த வாசிப்பில் இருந்தும்
ரத்தத்தை உறையவைக்கும் எழுத்தில் இருந்தும்
சித்தரவதை செய்யும் புறக்கணிப்பில் இருந்தும்
நீண்ட தூரம் செல்ல வேண்டும்
கனவுகளற்ற காலம்
வெளிதொலைந்த
பெரும் உறக்கம்
ஆட்கொள்கின்றது-
ஆள்கொல்கின்றது

மரணத்தின் கவிதைகள்-2

அலைகள் மணல் முகடுகளை
அரித்துச் செல்கின்றது
தனக்கான வரலாற்றை
தொலைத்த முகடுகள்
கண்ணீருடன் கரைந்து செல்கின்றன.
மரணத்தின் பெரும்வாசம்
நாசி துவாரங்களை
துளைத்தெடுக்கின்றது
ரோஜாவின் தீராத நறுமணத்தை
தேடி உடலைவிட்டுவிட
உயிர் துடிக்கின்றது

எழுத்துக்களின் உலைக்களத்தில்
உடல் சுண்ட சுண்ட
காய்ச்சப்படுகின்றது
வெளிவராத வார்த்தைகள்
குத்தீட்டியாய் குரல்வளையில்
இறங்குகின்றது
தண்டவாளத்தில்
துண்டிக்கப்பட்ட தலையாய்
கிடக்கின்றது
கவிதை உறைந்து கிடைக்கும்
ரத்தத்தை நாய்களாய் நக்குகின்றது வாழ்க்கை

சுவரை உடைத்துக்கொண்டு
செல்லவும் வழியில்லை
காளியின் கொடூர நாக்குகளின்
முன் மண்டியிட்டு அமர்ந்துள்ளேன்

தலையை வெட்டி காணிக்கையாக்க
விடியலின் வெளிச்சம்
வருவதற்குள் அத்தனையும்
முடிந்துவிட வேண்டும்
சுடுகாட்டில் இருந்து வரும்
மெல்லிய காற்று
என்னை அழைத்துச் செல்லும்
தேவதூதனாய் என் அறையில் நுழைகின்றது.

 - செ.கார்கி