பெருமழை வீதியெங்கும்
வெண்பூக்கள் உதிர்கின்றது!

சாரலில் முகிழ்க்கும் ஈசல்கள் உயிர்பிழைக்க தன்
சிறகுகளை அந்திமக் காலத்து ஆசையாய் இறைக்கிறது!

வஞ்சிக்கப்பட்ட இலைகள் மட்டும்
இடம்பெயர்ந்து கிளை நிரப்புகிறது!

பிசிரற்றுக் கிடந்த ஒருதலை நேசங்கள்
புத்துயிர்ப்புடன் ஞாபகத்தை மீட்டிக் கொண்டிருந்தது!

ஊன்றி சிந்தித்ததில் தனிமையின் விநோதம்
எரிகின்ற தணலாகி பின்பு இருண்டு பரிகசித்தது!

குரல் கசிந்துருக அவனையும் அவளையும் ஊடல்,
கொடும் வெயிலுக்குள் சுவடு பதிக்கிறது!

அடம்பிடித்த குழந்தைகள் ஏதுவாய்
குதூகலத்தோடு கப்பலை அரங்கேற்றம் செய்தது!

நத்தவனத்து புத்தருக்கு
அமைதியாய் சிறகு முளைத்தது!

மழைக்கு நீலநிறம் கசிந்துவிடாதபடி
ஒதுங்கி 
தன்னை வானம் குடையேந்தி காத்து நின்றது!

- ஆனந்தி ராமகிருஷ்ணன்