பல இரவுகளை 
கதவுகளுக்குள் ஒளித்து வைத்திருக்கும் 
வீடுகளின் பகல்கள்  குறித்து 
பேசிக்கொண்டிருக்கின்றன குருவிகள் 

அலகுகளில் உமிழப்படும் 
ரகசியங்களின் ஒலிக்குறிப்புகள் 
இலைகளால் உறிஞ்சப்படுகின்றன 

அடம்பிடிக்கும் இரை 
நழுவும் கணத்தில் 
திமிறும் பசி 
கொலை செய்யத் தயாராவதை 
புதிதாகக் கண்ட குருவிகள் 
காய்ச்சலில் ஒடுங்கியிருந்தன 

அலகும் மீனும் 
ஒன்றையொன்று கவ்வி உண்ணும் 
வினோத வயலில் 
கால் நனைத்த குருவிகள் 
தீக்காயங்களுக்கு 
மருந்திட்டு முனக ஆரம்பித்தன 

உதிர்ந்த இறகு 
ஒரு வீட்டின் படுக்கையறை ஜன்னலில் 
எரிந்து சுழலத் தொடங்கிய கதையை 
கீச்சிட்ட குருவியின் அலகை 
இலைகளால் மூடின 
மற்ற குருவிகள் 

குருவிகளின் கண்கள் நல்லவை 
எதையும் பெரிது படுத்தாதவை 
என 
வீடுகளின் பகல்கள் 
ஒளித்துவைக்கும் இரவுகளிடம் 
மீண்டும் சொல்ல ஆரம்பித்தன.

- இரா.கவியரசு