பருவமழை ஓய பயிர்விளைந்து சாய
பெருமையுடன் பச்சரிசி கொண்டு
அருமையுடன் பொங்கல் அழகுறவே பொங்கி
அனைவரொடும் உண்டுமகிழ்ந் தோமே!
கரும்புகளை வெட்டி கடித்துமென்று துப்பி
களித்துவிளை யாடிமகிழ்ந் தோமே!
எருதுமறி எல்லாம் புதுப்பொழிவு பெற்று
எழுந்துவிளை யாடப்புரிந் தோமே!

மாடுபிடி வீரர் மறமரபு காக்க
மடிந்திடவும் உள்ளமது கொண்டார்
ஆடுகளம் சென்றார் எருதுகளை வென்றார்
அரும்பரிசு ஆண்மையுடன் பெற்றார்
பாடுபடும் ஏழை படுதுயர்கள் போக்க
பொறுப்புடனே போர்புரிய வாரார்
மேடுபள்ளம் நீங்கி மனிதயினம் வாழ
மனதளவில் ஆசையெதும் கொள்ளார்

அரியமொழி கூறி அனைவரையும் வாழ்த்தி
அகம்மகிழப் பொங்கலுண்ணும் நாமும்
உரியவகை செய்து உழவரினம் காக்க
ஒருபொழும் எண்ணுவது இல்லை
கரியமில வாயு கலந்துவரும் தென்றல்
Koகடுகளவும் நன்மைபயக் காது
வரியளவைக் கூட்டி வளம்பெருக்கும் போக்கை
Mpவளர்ச்சியென எண்ணமுடி யாது

தமிழர்திரு நாளில் உழவரினம் வாட
திருத்தலங்கள் தேடிச்சனம் செல்லும்
சமயமிதற் கில்லை எனும்பலரின் சொல்லை
சனங்களுமே நம்புவது தொல்லை
சுமைமிகுந்த வாழ்வை சகித்துவரும் ஏழை
சுவைமிகுந்த பொங்கலிடு வாரோ!
சமதருமம் மண்ணில் தழைத்துவரக் கண்ணில்
தழல்வளர்க்க எண்ணுபவர் யாரோ!

அறுவடைகள் செய்து அமுதுபடைப் போரை
அரவணைக்கும் ஆட்சியிங்கு இல்லை
உறுபசியைக் கொன்று உழைப்பவரை இன்று
உயர்த்திவிட ஒருவருமே இல்லை
வறுமைதனில் வாடும் உழவரினம் தேய்ந்து
வரும்பொழுதில் பொங்கலொரு கேடோ!
அறுசுவையும் உண்டு அணிமணிகள் பூட்டி
அகம்மகிழு தேயிதுவும் நாடோ!

பறையரொடு பள்ளர் பகிர்ந்துண்ண மாட்டார்
புலையரொடு சக்கிலியர் சேரார்
மறைபடிக்கும் பார்ப்பார் வன்னியரை ஒட்டார்
மறவரையும் நாய்க்கரையும் தீண்டார்
துறவியென்ற போதும் குறவரிடம் செல்லார்
தனதுசாதி மேன்மைதனைக் காப்பார்
தெருவெங்கும் சாதி தடையின்றி வாழ
தமிழருக்குத் தைப்பொங்கல் ஏனோ!

எருதுகளின் தேவை அருகிவரும் நாளில்
எதற்குயினி இத்தகய பொங்கல்!
மருதநில மாந்தர் மறைந்துவரும் வேளை
வெறுஞ்சடங்கு ஆனதிந்தப் பொங்கல்!
இருதுருவ மாக வருக்கமுரண் நிற்க
இனியதிரு நாள்எவர்க்கு லாபம்?
தருணமிது தம்பி! சமதருமம் தோன்ற
தினவெடுத்து ஆர்ப்பரித்துப் பொங்கு!

- மனோந்திரா