முடுக்கி விடப்பட்ட பொம்மையென
துரத்துகிற பணிகள் முடித்து
இரவின் மடியில் ஓய்ந்து படுப்பதுபோல்
மேகக் கருவறையில் சூல் கொள்கின்றன திவலைகள்.

இமை கவிழும்போது விழிக்கும்
காதல் நினைவுகளென
துளிர்க்கின்றன துளித் துளியாய் மழை.

சொட்டுச் சொட்டாய்
எண்ணிலடங்கா கால்கள் கொண்டு
இறங்கி வருகின்றன
படிகளற்ற பரப்பில்.

வெக்கையில் வெடித்துக் கிடக்கும்
நிலங்களின் மீது
ஒத்தடம் கொடுப்பது போல்
ஈரத்தைப் படர்த்துகின்றன
வலி குறைய
சில்லிட்ட கரங்கள் நீட்டி
பறந்து திரிகின்றது வளி.

நீர்க்காடென பெய்தபடி இருக்கிற மழை உயிர்ப்பாலூட்டி
உயிர்க்கச் செய்கிறது பூமியை.

பிரபஞ்ச மேடையில்
ஆனந்த களிப்பிலாடும்
இம்மழைக்கு
தாளமிடும் இடி, மத்தாப்பாய் மின்னல்
ஒதுங்கி இரசித்தபடி வானம்.

- சிவ.விஜயபாரதி