பூக்கள் விரும்புவாயென
பறித்து திரும்புகையில்
உயிரற்ற பூக்கள் பிடிக்காதென
முகம் திருப்பிக் கொள்கிறாய்.

நட்சத்திரங்கள் அழகென
இரவினை ரசித்திருக்கையில்
சூரியன் வருமென
விடியலை எதிர்பார்க்கிறாய்.

கவிதை தோன்றாமல்
கிழித்தெறிகையில்
காகிதம் குறித்து நீ
கவலை கொள்கிறாய்.

என் கனவுகள் குறித்த
எந்த கவலையுமின்றி
உன் உறக்கத்தில்
கவனமாயிருக்கிறாய்.

புன்னகை மறந்துவிட்ட
நம் உதடுகளில்
அடர்த்தியாய் படர்ந்திருக்கிறது
மௌனம்.

இடைவெளிகள் பழகிவிட்ட
இக்காலத்தின் நிஜத்தினை
ஏற்கவோ மறுக்கவோ
அஞ்சுகிறது மனம்.

அறை முழுதும் மெல்ல
வழிந்தோடும் இசையில்
கரைந்திருக்கும் உன்
ரசனையை நினைத்தபடி

யாழெடுத்து
மீட்ட துவங்குகிறேன்
தந்திகள் அறுபட்டிருப்பதாய் கூறி
நடக்க தொடங்குகிறாய் சலனமற்று.

அறுந்த தந்திகளினூடே
தேங்கி வழியும் இசை
மெல்ல மெல்ல பரவுகிறது
கேட்க யாருமற்ற அறை முழுதும்.

- சசிதரன் தேவேந்திரன்.

சென்னை - 92.