1.

மிக அற்புதத் தோரணையுடன்
என்னெதிரே நின்றபடி
உங்களை மிக அறிவாய்க் காட்டிக்கொண்டபோது
வியப்பு மேலோங்க அதிசயித்திருந்தேன்.
சொல்லப் போனால் அப்போதெல்லாம்
திடமாகத் தானிருந்தேன்.
"நீயெல்லாம் ஒன்றுமேயில்லை" எனும்படியான பார்வையை என்மீது படியவிட்டவாறு
உங்கள் சப்பாத்துக் கால்களுக்கடியில் கிடத்தி புழு நசுக்குவதுபோல்
நசுக்கித் தேய்த்துக் காரியுமிழ்ந்த அன்றுதான்
நான் தூசானேன் முதன்முதலாய்.

2.

நானொரு தூசுதான்.
அதற்காகவெல்லாம்
உங்கள் தும்மலுக்கு
தொடர் காரணியாக்கி
என்னை சிறைப்படுத்தியிருப்பது
மாபெரும் குற்றம்.
நம்புங்கள்
உங்கள் விழிகளில் நீங்கள் ஏந்தும்
உறுத்தல்மிக்க தூசு நானில்லை.
தும்மலுக்குக் காரணமான தூசு
நானில்லை.

3.

தூசாகிய நான்
நீங்கள் உதிர்த்த இறகுகளால் ஒருபோதும் பயன்கொள்ளவில்லை.
விலைமதிப்பற்ற சிறகுகளை
அவசரத்திற்கென உங்களிடம்
கடன் கேட்டதில்லை இதுவரை.
நான் காற்றை சிறகாய் உடுத்திருக்கிறேன்.
அதன் உந்துதலில்தான்
உயரம் சஞ்சரிக்கிறேன்.
காற்றில் மட்டுமே என் சாகசம்.
காற்றில்லாதுபோனால்
அதோ தெரிகிறதே அந்த வானம்
அதன் இரவுகளில் துளி நட்சத்திரமாய் மினுமினுத்திருப்பேன்.

4.

இச்சமயம் முதல் அனுமதியின்றி
உங்கள் சிறையிலிருந்து
நிரந்தரமாக என்னை விடுவித்துக்கொள்கிறேன்.
எமக்கான இலக்கு வானம் தொடுவதே.
ஆக, விடுபடுதலுக்குப் பிறகு உறுதியாகத் தடையின்றி
பறக்கத் துவங்கிவிடுவேன்.
தேடவேண்டாம்.
ஒருவேளை
கண்டடைய வேண்டுமெனில் வாருங்கள்
காற்றின் விளிம்பில்தான்
மிதந்து கொண்டிருப்பேன்.

- வான்மதி செந்தில்வாணன்