மிகக்கவனமாக
கடந்து வந்த வழிகள்,
காலங்களின் வலிகள்
மனதை வேட்டையாடும்
பழைய நினைவுகளை
விரட்டிட விழைகிறேன்..

தைக்கப்படா காயங்களின்
தழும்புகள் தாங்கும்
கரடுமுரடான முகத்தை
இதுகாறும் மறைத்த
ஆசையின் அங்கிகளை
அவிழ்த்தெறிந்து
எனதிருப்பின் எல்லைகளை
எழுதிவிட எத்தனிக்கிறேன் ....

அடித்துச் செல்ல
அலைமோதும் ஒரு
கடும்சுழலுக்குள்
நீண்டிருக்கும் சிறு
நம்பிக்கை கிளையை
இறுகப் பற்றி என்னை
நிறுத்திக் கொள்கிறேன்..

மனதின் மூலைகளை
சிறுகச் சிறுக அறுக்கும்
அவமானங்களின்
விலங்கினை விடுவித்து
சிறகுகள் விரிக்கிறேன்
என் சுவடுகளை சுமக்க
காத்திருக்கும்
செவ்வானம் நோக்கி..

- அருணா சுப்ரமணியன்