ஊரும் உயிரும்
ஊர்ந்து கொண்டிருக்க நடுநிசி நாய்கள்
பேசும் ரகசியமாய்
புள்ளி வைத்து விட்டு
வாழும் வெண் சங்குகளில் கனத்த
கடல் துடித்தலைகிறது
அவர்கள் மீது
வன்மமல்லாத குரலை
உயர்த்தி அழைக்கிறார்கள்
ஒரு வகை
முலாமிட்ட முகம் தெரிகிறது
என்னூரின் கடவு ரயிலில்
கொஞ்சம் பூசி இருக்கிறது

என் மழைத்துளி உனக்குள்
அடர் அறுகம் புல்
நிலா ஊர்ந்த வானடியில்
உன் காலடித் தடயம்
மழையின் தீ ஊற்று என்னுள் நீ
நடுங்கிய சொற்கள்
விரலிடை அடைக்கலம் புகுந்தன
நீ குடியேறிய நிழலில்
இளைப்பாறும்
இதயம் உன்னுடையதா
பிரித்துப் பார்க்கவியலாத
உயிர்ப் பொட்டலத்தின்
கடவு சொல்லா நீ ஆதித்யா

00

வாழ்வு
அத்துமீறி அவிழ்க்கிறது
இதோ
இக்கடக்கும் கணத்திலும்
உயிர்ப் பொட்டலத்தை

காம்பு கழன்ற பூ
நுனி நசுங்கிய புல்
கன்றிப் பழுத்த காலை
சிறகு வெட்டிய கிளை
அணைய மறுத்து கருகிய திரி

ஆக
உயிரை
கட்டி இருந்த கயிறை
எடுத்து கழுத்தில்
சுருக்கிட்டுக் கொண்டேன்
காலம் ஒரு முட்செடி ஆதித்யா

00

உள்ளங்கைக் குடைக்குள்
இளைப்பாறும்
வார்த்தை வெயில்

தானியங்கும்
ஆயிரக்கணக்கான
உணர்வுப் புதர்க்காடு
புற்றெடுத்து
நனைக்கிறது மழை

சட்டென்று பூக்கும்
ஓர் உயிர்க் கவிதை
பூத்த ஏழு நிறவில்லில்
உளச் சிதைவற்ற வானம்

நீ இளைப்பாறு
நீ நனை
நீ நீந்து
நீ பாடு

சாவது
ஒரு நீந்துகை
ஒரு சுவாரஸ்யமான சுகம் ஆதித்யா

00

குரல் தொடுகையில்
நனையும் நனவுவெளிகளில்
சிறகற்ற பறவையானாலும்
தன்னைப் பறத்துகின்றது

தனித்த அந்திமம்
பயத்தில் மெல்ல மெல்ல
இருட்டைத் தானே கௌவுகிறது
மௌனக் காற்றின் மொழியிலும்
அவன் குரலின் விரல்கள்
அழைக்கின்றன

மனனம் செய்கின்ற
வார்த்தைகளற்ற
வார்த்தைகள் அவை
காதலிக்க போதுமான
திட்டுக்கள் புனைந்த
ஈரக் கண்கள் கரை நனைகின்றன

மிருதுவாக
என்னைக் கடக்கும் உலகை
கட்டிப் போடுகிறேன்
நடுங்கிய கால்களுடன்
படபடக்கின்றன
நதியின் இரண்டு கைகள்

தேங்கிய குட்டையை
கிளற என்னிடம் கேள்வி இல்லை
பொழியும் மேகம்
யாரிடமும் சொல்லாது
எழுதும் கர்வமற்ற சிலிர்ப்பின்
கருணை மனுவை
நீங்கள் ஏன் குட்டைகளில் சேகரிக்கிறீர்கள்

கூழாங்கற்கள்
நதியின் விரல்களில் தானே வழுவழுப்பாகின்றன
வாழ்வை காதலிக்க போதாதா உன் ஒளி ஆதித்யா

00

நீ விட்டுச் சென்ற கடலை
குவளையில் முகர்ந்து குடிக்கிறேன்
பேரிரைச்சலோடு
நுரைத்த விண்வெளி

ஆராய்ச்சி மையத்தில்
சூரியனின் ரேகை
ஆப்பிள் கனி நடுவே
ஓர் ஊஞ்சல் இனிமை

வரிசை தப்பி திசை தள்ளாடும்
ஒரு சிற்றெறும்பு
நிழலிலும் மறு குரல்
அகிலம் ஒரு சலனத்தின் நொடி

சூரியனின் தலைப்பக்கம் எது
காற்பக்கம் எது
பருகிய கடலை மீண்டு பார்க்கிறேன்
தவழ்கிறாய் நீ

அடிவானில் கிளைத்த நீலத்தில்
நிலவுக்கு ஏது திசைகாட்டி
மிருதுவாக சுருட்டிக் கொள்ள
நீலப்புடவைக்குள்
அடங்கிய மணற்கேணி

ஆகாயம், தீச்சரங்கள்,
காலச்சுவட்டுப்பாதம்,
பூக்களின் நிசப்தம்,
பசுமை, நம்பிக்கை
மீதமிருந்தது இன்னமும்
கொஞ்சம் அன்பும் உன்

காலை முதல் மலை வரையான

உயிர்த் தீண்டலில் ஆதித்யா

00

கடலின் ஜன்னலிடுக்கில்
நெரிந்திருந்த கவலைகளை ஏந்தியிருந்தது
மழைக்கு மிதந்த வெண்சங்கு.

வடுக்களை நீறாய் பூசி
வலைக்குள் அமுங்கி
இமைகளை நிமிண்டி
மென் குரலில் பேசத் தொடங்கியது.

நீந்தாத தோணிக்குள்
நானும் நீயுமாய்
அலையின் நுனியிலேறி
வெளிநீளும் பரந்த
சொர்ப்பனத்தைக் கோர்க்க
நெகிழ் இதழ்களில் திரியப்பழகின
கைகோர்த்த ஈரம்.

தூரத்தே புள்ளியாய் கரைந்த
இரண்டு நீலத்திமிங்கலங்கள்
கலைந்து போகும் வரை
நிசப்தங்களைப் பரப்பின.

பெட்டியில் அடுக்கிவைத்த அலைகளின்
வெதுவெதுப்பான கண்களில்
அதிகாலைஆகாயம் பரவியிருந்தன.

நட்சத்திரங்களின்
திராட்சைத் தோட்டத்தில்
விதைக்கப்பட்ட
ஞாபகப் பூம்பாத்திகள் மின்னுகின்றன.

மௌனப் புயல்
மௌனத்தால் முயங்கி
வானமும் பூமியுமாய்
ஆறு கலக்க ஞானத்தில்
வசியப்படுகின்றன.

காலங்கடந்த தீர்க்க தரிசனங்கள்
வாழ்வின் மையத்தில்
தேன் கலந்த விஷம்.

எத்தனை சிறகுகள்
பூட்டினாலும் பறக்கவில்லை
பரிசாய் நீ தந்த அன்பு ஆதித்யா!

00

சிலந்தி நூல்கள்
காலப்பூச்சிகளுக்கான

வலையை நெய்து கொள்ளட்டும்
என்னை உழுது கொண்டிருக்கும்
என் நிழல் உன் ஒளிக்கீற்றாலானது

ஒரு புத்தக விலங்கு
மாட்டினால் போதும் கைது செய்ய
வேறெந்த கட்டுக்குள்ளும்
உறைந்து கிழியாது என் உயிர்

ஒரு சாலையை கடந்து
சாலையை கற்றுக் கொள்வதைப் போல
வாழ்க்கையும்
கடந்தால் கற்றுக் கொள்வது தான் இயல்பு

காதலை ஒரு காதலால்
கற்றுக் கொள்வது
எத்துணை இலகு
கடலிடம் தரைக்கு வன்மமுண்டா
ஏன் இப்படி ஒட்டிக் கிடக்கிறது
மீன்கள் நடுக்கமுறும்
கடலைத் தானே நேசிக்கலாம்

என் தலையணைக்குள்
பஞ்சுப் பொதியைக் காணவில்லை
காதலை கடலின் சுவாசத்தால் நிரப்பி
உயிரால் தைத்து வைத்திருக்கிறேன்
எப்போதாவது வந்து எடுத்துச் செல் ஆதித்யா

00

விடாமுயற்சியோடு
அலைகள் விடாது வந்து
மோதினாலும்
தன்னம்பிக்கையுடன்
அதை உறுதியோடு
எதிர்க்கின்ற
கரையைப் போல

சில வேளைகளில்
அலைகளைப் போலவும்
சில வேளைகளில்
கரையைப் போலவும்
இருப்பதே
வாழ்வின் சுவாரஸ்யம்.

விடை தெரிந்த பிறகும்
வினாக்களை தேக்க
வேண்டுமா என்ன ஆதித்யா?

00

கடல் தன்னில்
கரைந்து கொண்டிருக்கிறது
சுவடுகள் வேர் விட இடமில்லை,
துருவங்களுக்கிடையில்
திசைகள் தொலைந்தன
கொலை வாளில்
தீவட்டிகள் முளைத்தன,
நாக்கு அவலங்களை
பேசும் படியாக இல்லை
கதவுப் பிணைச்சலில்
கட்டி வைக்கப் பட்டிருக்கிறது,
துண்டு துண்டாகக்கிடக்கும்
புதிய காலத்தை முனை தீட்டும்
அலறும் ஆத்மாக்கள் சீவுகின்றன,
எழுதித் தீர்ந்து போன
ஆழ் நிசப்தத்தை துளைத்து
நிகழ்த்திய கவிதை ஒன்று
அரித்துத் தின்று கொண்டிருக்கிறது,
நீவி விழுந்த மழைத்துளி ஒன்றுகூட
பாதங்களை தழுவ முடியாத படி
என்னை யார் கல்லுள் புதைத்தது ஆதித்யா

00

அதிகாலை மனம் உன் படல்

வார்த்தைகளில் உடைகிறது

அலைந்தலைந்து இயலாது
ஒரு கட்டத்தில் மௌனத்தில்
குடியேறுகிறது ஆழக் கடல்

உன் காதல் பரீட்சையில்
முதல் முறையாக
தோற்றுப் போனேன்

பொறுமை காப்பதால் தானே

பூமியும் பெண்பாலானது

அன்பு புரிதலில் பல முறை மரணம்
பிரிதலில் ஒரு முறை மரணம்

பறவைகள் விதைப்பதுமில்லை
அறுவடை செய்வதுமில்லை
ஆனால் வானம் வரை பறக்கின்றன

துடித்துக் கொண்டே இருக்கும்
சொற்களின் உயிர் கவிஞனினுடையது

சருகேறி உயிர்த்த எறும்பு
ஒருபோதும் மறந்ததில்லை மரத்தை

வேர் விட்ட முளைகள்

வான் நோக்கியே வளர்கின்றன

உதிர்ந்த இறகுகள் பறந்த வானத்தை
துயர் பட வரைகிறது

நதி நகர்த்திய கல்
எப்போது கனிந்தது என்று
நதிக்கு தெரிவதில்லையல்லவா ஆதித்யா


00

வாழ்வை நேசிக்கக்
கற்றுத் தரும் மனிதர்களின்
ஈரத்தை ஈரத்தோடு மிருதுவாக
தொட்டுக் கொண்டே இருக்கும்
கறுப்பு மைதடவிய
பார்க்கர் பேனா முனை
குடியேறிய என் உள்ளங்கை போல

தேடுதல் ,தொலைதல் என பனிமேகங்கள்
ஒன்றை ஒன்று தழுவுவதைப் பார்

இது உன்பின்னான
வெண் மேகத்துக்குள் மட்டுமா

ஜீன் பியாஜேயும்
ஜோன் டூயியும்
சிக்மன் ப்ரொயிட்டின்
பூங்காவை தேடினார்கள்
மனம் குடித்து மீள்வதற்காக
நெஞ்சில் முள் படர்ந்திருக்கிறது
என்றாராம் ப்ரொயிட்
புல் தடுக்கி விழுந்தால்
முள் வேலி தானே

கலைந்த சொல்லுள்
களைந்த மனமும் உயிரும் வாழ்ந்தால்
மரணத்திற்கே மரணமல்லவா

எப்போதோ இழுத்து மூடப்பட்ட
பிணவறையில் பூக்களின் வாடை

உலகம் வசீகரமாக ஆரம்பிக்க
காலத்தின் விரல் பிடித்து
எடுத்தடி வைக்கிறாயா ஆதித்யா

00

இது முகவரியற்ற மேகம்
எங்கெங்கோ அலைகிறது
உன் வானத்தின்

கோணத்தை அளந்தபடி
நினைவூற்றி வளர்க்கும் உன்னை
வேரோடு பெயர்த்திருக்கிறேன்
உயிருக்குள் பதியம் வைக்க

நீ ஒரு தீராத ஞான தாகம்
பருகிக் கொண்டே இருக்கிறேன் நான்
ஜன்னல் வழி நுழைவேன்
உன் பிராண வாயுவாய்
நீ தூங்கு
நான் விரல் கோத வேண்டாமா

பத்திரப்படுத்திய
ஓர் ஆயுள் நிரப்பியை
வேறு எதனால் ஆசுவாசப்படுத்த
நெடுதுயர்ந்த
மரமொன்றாய் நான்
நிழலில் நீ இளைப்பாற

வேண்டுமல்லவா ஆதித்யா ?

00

உன் ஒவ்வோர்
அடர் மாலையிலும்
பூமியை நனைத்து விடாதே
ஒரு துளியையேனும்
நமக்காகப் பத்திரப்படுத்து.

நுழைந்த மனசின் அஞ்சுதலில்
ஒதுங்கி இருக்க மறுக்கிறது
ஆசையும் அகமும்

எங்கோ பறக்கும்
அக்கா குருவியின் அலகு
இக்கரைக்கும் அக்கரைக்கும்
துடுப்பு வீசுகிறது

ஒரு கடலளவு கனிந்து
தவறிச் சிதறிய நிலாத்துண்டு
வாசல் முழுவதும் நிரம்பி வழிகிறது

தாள்களில் நனைத்து நனைந்து
இந்த நாள்களில் தேங்காமல் நனைக்கிறது
ஒரு பேரிடி மழை

அசையாத மரமொன்றின்
உதிர் வெயிலில் முளைத்தெழுகிறது
நீ அனுப்பிய நிழலின் நிவாரணி

வேறு ஒன்றும் வேண்டாம்
நாட்களை திறக்கும் முகமொன்றை

பொருத்தி வை போதும்

பரிமாணங்களற்ற உன்னைப் போல
கிளர்ந்தெழும் மூச்சின் நுனியில்
ஒவ்வொரு அணுத்துகளிலும்
அடர்வன பேரன்பின்
அருவிகளின் தாகம் இருக்கும்
உற்றுப் பார் உன்னுள் கடல் நிறத்தில்
நான் காணாமல் போயிருப்பேன் ஆதித்யா

00

இலைகள் எப்போதும்
பூக்களை பேசியபடியே
உறங்க வைத்து விடுகின்றன
என் மௌனம் கலைத்து

காக்கையின் குரல் எடுத்து
சொற்களை நட்டாள் என் தேன் சிட்டு
என் மொழியை கொத்திச் செல்கிறது
பறந்து வீழ்ந்த பறவை
ஒன்றின் இறகில் ஒரு துளி வான்சிறகு

ஓர் இருளை இன்னோர் இருள்
கரைத்து விடுவதற்காக
ஓர் ஒளியை இன்னோர் ஒளி
தோற்று விடுகிறது

என் பிச்சைப் பாத்திரத்தில் வீழ்ந்து
கழிவு நீரில் தெறித்தது
உன் அலட்சிய நாணயம்

ஆணிகளின் சிதிலங்களால்
சிலுவையடித்த மனமொன்றை
அன்பு வழிய அனுப்பிவைக்க
மாற்றிய உன் முகவரியை அனுப்பு

இலைகளின் கன்னத்தில்
வேர்களின் விரல்
வாழ்வின் கசப்பான வரிகளை
வரைந்து தீர்க்கிறது

அநித்தியத்தின்
பூக்கள் பூக்கவில்லை எனில்
அண்டத்தில் காற்றுக்கு வாசமேது ஆதித்யா

00

படபடக்கும்
நாட்காட்டியொன்றை
கிழித்து வீசினேன்
அது எப்போதும் படபடத்தே இருப்பதால்

நிழல்களை சுமந்த படி வரும்
மீள் படகுக்குள்
நிஜமான ஒரு நொடியை வானமும் தீண்டியது

ஒரு மாரித் தவளைக்கு
வேண்டியதெல்லாம் ஓரே இரவின் மழை

உன் மொழியில் நான் மனிதனெனில்
என் மொழியூடே கசிகிறது
மானுட இருளின் எதிர் வியூகம்

வாழ முனைந்த தர்மச்சக்கரத்தில்
நசிந்து கிடக்கிறது புத்தனின் தலை

வடு உருளும் திரியில்
கச்சிதமாய் நகர்கிறது இருள் படிந்த ஒளி

நீ சிரித்துக் கொள்வதற்காகவேனும்
என்னை இவ்வண்ணம்
நகர்த்திக் கொண்டிருக்க வேண்டும்

மனம் அம்மணமான
ஓர் உயிரின் மணம்
உடல் கருகும் கணம் நீ உணரக்கூடும்

மண் நுரைத்த பொழுதொன்றில்
ஆகாயத்தின் நினைவு தப்பி இருந்தது

பறவையைப் போல தூங்குவதற்கும்
மரங்களைப் போல தாங்குவதற்கும்
கொடுப்பினை இருக்கிறதல்லவா

மண்ணாகப் பிறந்த என்னை
மழைத்துளிக்கு கொடுப்பது
அத்துணை சிரமமானதா ஆதித்யா?

00

முத்து விளையும் கடல் வாசத்தை
என்னுள் நிரப்பி
சேகரித்து வைத்திருக்கிறேன்

வலசை கடக்கும் பறவைகளின் சிறகசைப்பில்
வாதையால் முனகும் என் தேசத்தின் சப்தம்

கூதல் சிமினியில் சிறகுலர்த்தும் குஞ்சுப்பறவை
எனக்காக உதிர்க்கிறது நெடும்பிரிவின் வலி

சிலிக்கன் பதுக்கிய தெருவில்

சுவடு பதிக்கக் கூடுமா
செவ்வரத்தம்பூ நிறைந்த எனது தெருவை

தோரணங்களாய் கிழித்து தொங்க விடுவதற்கும்

தென்னங் குருத்துகளே தேவையாய் இருக்கிறது

ஒரு பூவின் நிழற்குடை உடைந்து சிந்தின
சிறுகச் சிறுகச் சேர்த்த கொப்புத்தேனை

மழை, வெயில். காற்று, கடல் கூட
தன் சுயத்தைத் தோலுரித்த பொழுது
மனிதன் எம்மாத்திரம்

பூக்களை விட குற்றிக் கிழிக்கும்
முட்களை அதிகம் நேசிக்கிறேன்

பூக்கள் ஆக்குவதற்காக.

இரசப்பூச்சுக் கண்ணாடி இல்லாவிட்டால் என்ன
உன் நிழல் இருக்கிறதே பிரதிபலிக்க

பூக்களின் புத்திக் கூர்மை
வண்டின் காலை ஒட்டித் தாவும் மகரந்தப்பொடி

இறகு பூத்த நெருஞ்சிக்காடு

என்றாவது உணர்கிறாயா ஆதித்யா

- தமிழ் உதயா, லண்டன்