மகிழ்ச்சியின்
ஒவ்வொரு கணங்களையும்
மறுதலிக்காது உன்னிடம்
பகிர்ந்து கொண்டேன்
ப்ரியரக்ஷா!

சாரலென துளித்துளியாய்
தூவிக்கொண்டிருக்கும்
இப்பிரியமழைக்கு
என்ன பெயரிட?

யாருமற்ற தனியறையில்
உடனிருப்பதாய் எண்ணி
நிகழ்த்தும் உரையாடல்கள்
உணர்த்தக்கூடும் அன்பின் ஆழத்தை..

பனி முழுதும் நனைத்த
இறகை தன் கூரலகால்
கோதிடும் பறவையென
தனிமையப்பும் இரவை
உன் நினைவைக் கொண்டே
வெளியேற்றுகிறேன்.

உனக்குப் பிடித்த பாட்டை
உனக்குப் பிடித்த உடையை
உனக்குப் பிடித்த புத்தகத்தை
என எல்லாவற்றையும்
நிமிடமொருமுறை நினைவிலிருத்தி
நீங்குகிறேன்!

நான் தொலைந்தவொரு
தருணத்தில் தான்
நீ கிடைத்தாய்!
தொலையாதிரு!
தொலைத்திராதிரு!

- இசைமலர்