முற்றிய சூரியனில் பிழிந்த மீதியாய்

சிதறிக் கிடந்தன
என் பூக்களின் மகரந்தங்களில் 
வடியும் இரவின் முகம்.

உன் வசந்த காலத்தின் 
கொல்லைப்புறக்
கத்தரித் தோட்டத்தில் வளரும் 
ஏகலைவப் பொம்மை நான்.

உன் சிலுவையில் 
பல முறை மரித்திருக்கிறேன் 
மூன்றாம் நாள் 
உயிர் தருவாய் என்பதாலா ?

செத்துச் செத்து மறுபடியும் 
வசீகரச் சொற்களைத் தானே 
அதீதமாகக் காதலிக்கிறேன் 
என்ன பிரளயம் இது

00

இருளின் சிருங்காரத்தில் 
இரண்டு கருங்குவளைப்பூக்கள்
சிருஷ்டிக்கப்பட 
நிலா மணக்கும் வானத்தை மடித்து 
மனதிற்குள் உதிர்த்தி 
நழுவித் தரையில் விழுந்த 
உலகம் விடிந்திருந்தது.

விழித்திருக்கும் அறையின் ஏரியில் 
ஒரு காதலை விசிறி கண்களில் கத்தரித்து 
கட்டி விளையாடிய காகிதத்தோணி
துருவ உடுக்களின் நள்ளிரவுப் புன்னகையில் 
இன்னும் சிதையாமல் நனைந்து 
நினைவுகளை சொட்டிக் கொண்டிருந்தது.

பொய்கையின் விழிகளில் கவிழ்த்து 
புருவங்கள் நெளிந்து 
சிறகு முளைத்த மொட்டுக்களாய் விரிய விரிய 
கன்னக்குழியில் மணியொலி கிணுகிணுத்தது.

சட்டென கருங்குவளைப் பூக்கள் துளிர்த்தன,
ஈர மின்மினிகள் ஒளிர்ந்தன,
சிலிர்த்த இரவு நதிகளைப் பின்னின,
படபடப்புடன் பசித்த பட்டாம்பூச்சியாய் 
பதாதை நெய்கிறாய்,
அடைமழையின் சொல் குழைந்து 
நீல அல்லி இதழ்களை எழுதுகிறேன்.

துடிக்கத் துடிக்க குருதித்தாங்கி 
தணிக்கை செய்ய மறுக்கிறது,
நிலவு போதை முறிந்திருந்தது,
சிதறிக் கிடந்தன கணங்களின் மடியில் 
காலத்தின் வேர்களும்
உறைந்து திணறிய சில சொற்களும் 
பறவைகள் பறக்கத் தயங்குவதில்லை அல்லவா.

00

ஓடும் கடிகாரமுட்கள் 
பிரிந்து போன ஒரு நாளின் நள்ளிரவின் 
அத்தனை வரிகளிலும் அமர்ந்து விடுகின்றன

தாகத்தோடு ஒரு கூட்டுப்புழு 
பொட்டுச்சிறகு கட்டும் போதெல்லாம் 
குருத்துப் புற்கள் வெள்ளித் தீவொன்றை 
தலையில் கட்டி சிலிர்த்து விடுகின்றன

மயில் தோகையில் வேலி ஓணாணில்
எத்தனை நிற ஆடை 
தோற்கடித்த துயரவானில் 
எத்தனை நிறச்சேர்க்கை 
தினமும் நட்சத்திரங்கள் 
ஒரே கணுவிலா குவிகின்றன

இந்த கணத்திற்கு முந்தைய கணம் 
என்னைக் கட்டம் போட்டு அடைக்கிறது 
கொஞ்சம் சொற்களும் 
கொஞ்சம் உணர்ச்சிகளும்

அந்த கொஞ்சம் என்பதற்குள்
நீங்களும் அவர்களும் கூட 
சில சமயங்களில் பேரிடர் 

00

ஆகாயக் கருந்தரையில்
சூல் கொண்ட குறிஞ்சிப்பூ 
ஓர் இரவில் மௌனமாய் கசிகிறது,
இன்னும் சில நொடிகளில் 
கடலில் நழுவி அந்தரத்தில் மிதக்கிறது, 
இதற்கு முன் பறந்த சிட்டுக்குருவியின் 
உடைந்த இதயம் 
உருகிச் சிந்தியது வார்த்தைகளை,
ஒழுகிய கூரையை 
இரவின் ஏழு திசைகளையும்

ஏந்தியபடி அதிர்கிறது
அடிவயிற்றில் வலி கொண்ட பூமி 

00

குரல்வளையை நசுக்கி 
ஓநாய்க்கு இரையாக்கினாலும் 
ஊதியமல்லாத காசை 
செல்லாக்காசு ஆக்கினாலும் 
என் தேசக்குழந்தைகளின் புன்முறுவல்களை 
பிடுங்கி எறிய முடியாதுங்களால். 
இரவுகளை உடைத்து சிதறி 
எரிதணலை கண்களில் ஊற்றினாலும் 
என்னைக் குருடாக்க முடியாதுங்களால். 
இகழ்ச்சி வாள் என்னை சிதிலப்படுத்தாது 
உங்கள் வதைகளால் அறைந்த 
என் உயிரின் சுவர் 
இடிந்து பாழடையவில்லை.
கடல் தேவையற்று கொந்தளிக்காது
காற்றுக்கு அப்பால்
மண்ணுக்கு அடியில்
அசரீரிகளை உணர முடியும் 
இந்தப் பேரண்ட வசந்தத்தை 
ஒரு முரட்டுக் கூடையில் 
பூவனமாக்க முடியும் 
நெகிழ்ந்த கோணிப்பையை 
எப்போதும் திறந்த கதவில் 
மாட்டி இருக்கிறேன். 
மிச்சத்துண்டுக் காணி 
மரணமடையாத மொழி உயில் 
இன்னும் நிறைய திமிர் 
கோப்பை நிரம்பிய உங்கள் நஞ்சு 
போதும் எனக்கு முகிலேற,
உயிரின் கடைசித் துளியையும் பிழியுங்கள்
விஷங்களில் ஊற்றி நிரப்பி 
மூச்சை விலை பேசுங்கள் 
தெருக்காட்டில் பிழைக்க நேரினும்
பட்டினி என்னைப் புசிக்காது 
மன இடைஞ்சல் சரிக்காது 
அன்பிலும் மூர்க்கத்திலும் 
இன்னும் முதுமையாய் இருக்கிறேன்
என் மறுமுகம் அது 
போ மனிதனே என்னைக் கட்டி 
உன் நாய்க்குத் தீனி போடு

00

ஏறும் போதும் இறங்கும் போதும் 
சீராகத்தான் இருக்கிறது படிகள்
காலம் சற்றே முயன்று 
தயங்கித் தயங்கி பின்னகர்கிறது

சிலசமயங்களில் வருடும் சொற்கள் 
கைநழுவி விழுந்து விடுகிறது
வாடி வாடகை பூக்கூடையில்

இரண்டாய் மடித்து தலையை தாங்கிய 
கையில் இருந்த அழுத்தம் 
கலைந்த மனதின் கனவுகளை
கோடிட்டுக்காட்டியது

உயிருக்கும் உயிர்த்தன்மைக்குமிடையில் 
ஒரு மரத்தையும் 
ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றங்கரையில் 
ஒரு பிறை நிலவையும் 
மலரையும் வரைந்து முடித்த போது,

துயர் வழியும் சொற்கள் 
மொட்டை மாடியில் 
சற்று தாமதமாய் வந்தமர்ந்தன 
என் விரல்களுக்கு இடையே
"துயர்மிகு வரிகளை 
இன்றிரவு நான் எழுதலாம்" நெரூடா 
என்னுள் மிக நெருக்கமாக. 

00

தூரத்து வனத்துக்குள் 
ஓர் ஓவியன் 
உலகின் கதவுகளை 
திறந்து கொண்டிருக்கிறான்
நகர்ப் பகுதியில் அன்னியன் 
அருவியின் தாகத்தோடு 
கடலைப் புசிக்கிறான் 
அவன் ரோஜாச் சாயங்களால் 
தன் காயங்களுக்கு 
சில கணங்களை மருந்திடக்கூடும் 
சில கணங்களை 
சுவாசிக்கவும் கூடும் 
ரோஜாக்கள் அவன் ஓவியங்களை 
நிறமூட்டுகின்றன 
நம்பிக்கைகள் வியர்க்கின்றன 
பயம் அவன் கடலை நிறைக்கிறது. 
முன்பு அவன் ஒரு போர் வீரன் 
அவனை ஓர் இளைஞனாய் 
நீ காணுவாயானால் 
உன் விழிகள் அழகானவை
அவனை உற்றுப்பார் 
நெற்றியில் நாடு வரையப்பட்டிருக்கும்
அதை உணர்வாயானால்
நீ அழகானவனாவாய் 
அவர்கள் கட்டிய கல்லறையில் 
யாரோ துக்கத்தில் இருக்கிறார்கள் 
நான் அவர்கள் ஒளிர்வதற்கான
இரண்டு நாற்காலிகளை 
கட்டிக் கொண்டிருக்கிறேன்

00

சப்தமில்லாத பெரும் இருளில் 
சுள்ளிகளைப் பொருத்தி 
கூடொன்றைக் கட்டினேன் 
நீங்கள் கொடுத்த பூக்களையும் 
மகிழ் முறுவல்களையும்
அகன்ற சொற்களையும் 
தனித்தனியாக 
வார்த்தைக் குடுவையில் சேமித்து 
கூண்டுப் பறவைக்காக
காத்திருக்கின்றன. 
அடர்த்தியான ஈர நிலம்
விழி பனிக்க ஒரு துளி மேகம் 
உள்ளங்கை தேக்கி வைத்திருந்த 
விழிகளின் கடல். 
இரண்டு இமைகளுக்கிடையில் 
ஏன் கடலை கட்டுகிறீர்கள் 
இரவுக்கும் பகலுக்குமான 
உரையாடலில் 
உதிர்த்துக் கொட்டிய 
நட்சத்திரங்களை 
விரல்களில் எண்ணிப் பாருங்கள் 
அங்கே திடுதிப்பென 
நகரும் ஒரு மாமர நிலாவும் 
ஒரு நுரைகாதல் நதியும் 

00

அகன்ற சாலையில் பூவின் வாசல் திறந்த
பட்டாம்பூச்சி மனசின் மகரந்தத் துகளில்,

வேம்பின் இலை நரம்பு வழி 
வழிந்த மழைத்துளி 
பூமியின் மார்பு துளைத்து 
நனைத்து சில்லிட்ட கணத்தில்,

கிளர்த்தும் பனிமொட்டில் 
வெடித்த பொழுதொன்றின் 
நுனிப்புல் குருத்தில்,

சொட்டுச் சொட்டாய் வடிந்து கரையும் 
இடுக்கு ஓலையின் மனக்கசிவில்,

குஞ்சுப் பறவைகளின் சிறகசைப்பில்

முகாரியின் முனகல் ஒலியின் மெல்லிய கணத்தில்,

மென்னதிர்வின் இன்ப உணர்வை 
மலை தழுவி வீழும் 
நுரைத்த அருவியின் துடிப்பில்,

கடல் தோய்ந்து ஈரம் துவட்டும்

பாறையின்பேரண்டப் பிளிறலில்,

மனதைச் சுத்திகரிக்கும் 
கலக்கமற்ற நதியின் 
காற் கொலுசொலியில்,

வந்து வீழும் துயர் அழுத்தும் ஒரு பாடல்
தெப்பலாகும் மழை மனது 

00

எப்பொழுதுமே 
நெஞ்சுக்கூட்டின் முள்ளெலும்புகள் 
வார்த்தைகளின் விளிம்பில் வடிகின்றன,
வருடும் வார்த்தைகளின் 
ஓசையைக் கேட்டு அஞ்சுகின்றன,
உறங்கும் போதும் அவைக்கு 
உணர்ச்சி இருந்து விடுகிறது, 
கண்களில் சுண்டி இழுக்கின்றன, 
இவை உதடுகளுக்கும் 
நாவுக்குமான ரசவாதம் மட்டுமா? 
சூழ்ச்சிமிகு சொற்கள் 
கைநழுவி விழுந்து விடுகிறது, 
ஈரம் சொட்டும் முத்தச்சொற்கள்
ஏன் வெதுவெதுப்பாக்குகின்றன,
கண்ணயர்ந்த நொடிகளில் 
சிறகு சிலுப்பி உதட்டில்
பறக்கும் பூக்களாகின்றன, 
ஒரு சொட்டு மௌனத்திற்கிடையே 
மிதக்கும் உயிரும் இரத்தமும் 
எத்தனை சொற்களை ஊற்றெடுக்கின்றன, 
கணங்களின் பொழுதுகள் 
புலன்களின் உக்கிரத்தில் 
மான்குட்டிச் சொற்கள் 
உடனே துள்ளுகின்றன,
குரலைக் குடிக்க வேண்டும் 
குரலின் விரல்களை நீவ வேண்டும் 
ஒரு ஜன்னல் பார்வையில் 
குரலை அணைக்க வேண்டும் 
இவையெல்லாம் நேசிக்கத் தெரிந்தவனுக்கு 
ஒரே ஒரு கிண்ணத்தில் 
ஏறிக் கனிகின்றன சொற்கள்.
பிழிந்த சொற்களோடு அந்தப் புங்கைமரத்தில்
நான் ஒரு காதல் முகாரி பாடும் பறவையானேன்
எனக்கு முன்னால் உலகம் பறந்து கொண்டிருந்தது 

 00

மௌனத்திற்கும் 
அதற்கு அப்பாற்பட்டதுமான 
புராதன குமிழியை உடைத்து 
ஒளிர முற்படும்போது வார்த்தைகளும் 
வார்த்தைகளற்றதுமாக படர்ந்த 
மூளைப்பாசியில் நகர எத்தனிக்கின்றன.

நிலாவெளியில் கட்டுண்ட பறவை 
பறந்த தெருவில் 
நிலாவும் உடன்பறக்கிறது
புல்லின் விரல் நுனியில் கட்டிய 
பனித்தீவுக்கு விண்மீனை அனுப்புகிறது 
விளக்கு வைக்க ஒரு விண்ணப்பத்துடன்

காலத்தின் உயர்ச்சியில் 
இயக்கமும் இயக்கமற்றதுமான 
இடைக்காலத்தில் 
சலனப்பட்டு தப்பித்தவறி 
வீழ்ந்து விடுகிறது சூரியக்கணம்

துயரங்களுக்கும் 
துயரமல்லாத தருணங்களுக்கும் இடையே 
துயரங்களின் ஊமை வாசல்கள் 
தானாகவே திறந்து விடுகின்றன

நிஜத்திற்கு
வேறோர் நிஜமிருப்பதில்லை 
இரண்டு துண்டாக 
அது அறுபடுவதும் இல்லையல்லவா
சூரியனும் சந்திரனும்
எத்துணை ரகசிய ஒளி 
இருந்தும் கடலுக்கு மேல்தானே 
உலா வர முடியும்.

- தமிழ் உதயா, லண்டன்