அவள் கனவுகளின்
எல்லாக் கதவுகளும்
திறந்து கிடக்க
உள்ளே வந்த காற்றிடம்
தன் சுமைகளை ஒப்படைக்கிறாள்

மனக்கொதிப்பின் தகிப்பில்
மெல்ல மெல்லப் புகை
மேலே எழுகிறது

அவள் வாழ்க்கை என்னும்
பெரும் மைதானத்தில்
பார்வையாளர்கள் அதிகம்

போவதும் வருவதுமாய்
ஆறு மைத்துனர் குடும்பங்கள்...
ஒரு நாத்தனார்
பொருட்கள் பற்றாக்குறையால்
' ச்சப் ...' பென்ற சமையல்
அவ்வப்போது
இடுப்பு ஒடிய வேலைகள்
தலையில் வாரிப் போட்டுக்கொண்ட
பொறுப்புகள் வழிகின்றன

பெரிய குடும்பத்தில்
வாழ்க்கைப்பட்டது அவளை
அடிக்கடி அந்நியப்படுத்துகிறது

மீண்டும் தாய்வீடு சத்தியமில்லை
புகுந்த வீடோ
திறந்தவெளிச் சிறைச்சாலை
ஏசுபிரான் சிலுவை
இவள் தோளையும் அழுத்துகிறது
--- எல்லா அப்பாக்களுமே
தம் பெண்களுக்குக் கிணறு
தோண்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

- ஸ்ரீரங்கம் சௌரிராஜன்