வயிற்றுப் பசிக்கு
வறள்நிலத்தைப் பார்வையிட்ட
பேருழவன் ஒருவன்
தன் அடுத்த செய்கையாய்
சிறு அளவிலான மண்கட்டி ஒன்றினை
இரு கரம் நீட்டி நிலத்திலிருந்துப்
பிட்டெடுக்கிறான்.

பின்
கட்டியைக் கலனிலிட்டு
பெருகும் தன் விழிநீர் ஊற்றிப் பிசைந்து அதில்
உயிர்க்கொல்லும் சொட்டுநீர்
சில துளிகளிட்டுக் கரைத்து
கடகடவெனப் பருகி
கோடிட்டுக் கிடக்கும் பெருநிலத்தின் ஒரு சிறு பரப்பில்
விதையென
தன்னை வீழ்த்தி நிரப்புகிறான்.

புல் பூண்டு முளைக்கவும்
அறிகுறி அற்ற
அவ்வெடிப்பு நிலத்தில்
இப்போது
வானம் பார்த்து முளைத்துக் கிடக்கிறது
பாழாய்ப்போன உழவனின்
பசிதாங்கிய புதைமேடு

- வான்மதி செந்தில்வாணன்