கண்கள் திறந்திருக்கும்போதும்
தனக்குத்தானே திரையிட்டுக்
கொள்கின்றன சமயங்களில்..
பாதங்கள் செல்லுமிடமெங்கும்
சிதறும் வெறுமை,
இலைகளைச் சருகுகளெனவும்
பூக்களைப் புதைகுழிகளெனவும்
காட்சிப்படுத்திவிடுகின்றன..

உயரப்பறக்கும் பறவை
தன் கன்னம் கீறத்தான்
பாய்ந்து வருகிறதென்று
விரல்களுக்குள் புதைந்து
மறைகின்றன
அடையாளமற்ற முகங்கள்..

குவிந்து கிடக்கும் தனிமைகள்
தன்னைத்தானே கொட்டிவிடத்
தனக்குத்தகுந்த இடமொன்றை
என்றேனும் ஒருமுறை
தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன..
நிஜம் தேடியலையும் பொழுதில்
வார்த்தைகள் விலகும் நேரம்
காதுகளுக்குள் ஒலி புகுவதில்லை..

நேற்று வேறொன்றாயும்
இன்று மற்றொன்றாயும்
மாற்றி மாற்றிக் காண்பதை
எங்கேனும்
ஓர் ஓரத்திலமர்ந்து
கண்டுபிடித்து விடுகிறது
சிறு குற்றவுணர்வு..
இனிக்கும் கற்பனைக்கு
இன்னும் கொஞ்சம்
அழகூட்டி விடுகின்றன
ஏமாற்றங்கள்..

பலவீனங்களுக்குக் கிருமி
என்று பெயரிட்டுவிட்டு
அதற்குப்
பொருத்தமற்ற சில
வர்ணங்களையும் பூசி
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன
சில விதிகள்..

தன்னைநோக்கிக் கத்திக்கதறிப்
பாய்ந்து வந்த மௌனங்களைத்
தடுத்தனுப்பிவிட்டு பின்
அடுத்தடுத்த கதைகளுக்கென்று
காத்திருக்கின்றது அந்த
உயரமான மதில் சுவர்..

இந்தப் பக்கத்துக்
கதைகளுக்கும்
அந்தப் பக்கத்துக்
காரணங்களுக்கும்
நடுவில் புகுந்துகொண்டு
வெளியே புலப்பட்டுவிடாதவாறு
ஒவ்வொரு நிமிடத்திலும்
ஒளிந்தே இருக்கின்றன
நியாயங்கள்..

- கிருத்திகா தாஸ்