வாசற்படி கடந்து
வெளியேற மறுக்கும் கடிவாளங்கள்...
வாழ்நாள் முழுதும்
தனையிழந்து தவிக்கும்
புலம்பெயர்ந்த உறக்கங்கள்...

மெத்தையில் சொக்கியுறங்கும்
வயதைக் கடந்த பின்னும்
பற்றியேறி அடக்கியாள்கிறதெனை
அவனிலிருந்து கிளம்பும் வன்மப்பசி........

ஒற்றை அறைக்குள் வெட்கம் தளர்த்தி
மல்லாந்திருக்க
பிரள்கிற பிள்ளையின் அசைவுகண்டு
மனம்கூசி ஓடிஒளிகிறேன்....
கழட்டியெறியப்பட்ட குண்டிச்சீலை தேடி...

உடலெங்கும் நிலைகொள்ளும் நெடுந்துயரமிது. .......
நொடிக்கொரு தண்டனையாய்...
நகக்கீறல்களும் கடித்த காயங்களும்.......
இராத்தூக்கம் மடிந்த எனதிருப்பில்
வடுக்கள் பதிந்த உறுத்தலாய்...
கைகோர்த்துக்கொள்கிறது
குழந்தையின் எதிர்காலம்...

- வழக்கறிஞர் நீதிமலர்