கொழுந்து விட்டு எரிகிறது
கண்ணும் காட்சியும்
மனசாட்சிக்கு அதோ அந்த சிறுவன் உயரம்தான்

*****

தூண்டிலிட்டு காத்துக் கொண்டிருக்கிறேன்
ஒரு துளி நீராவது கிடைக்கும்
வறண்ட குளத்தில்

*****

பசி வட்ட வடிவம்தான்
அடுத்த
தோசையும் அதையே சொல்கிறது

*****

சற்று கவனிக்கத் தவறி விட்டேன்
இடம் பொருள் ஏவல்
எல்லாம் தாண்டியிருந்தது
நான் கவனிக்கத் தவறியது...

*****

சித்திரம் நகரும்
நம்பவில்லையா
சித்திரத்தையே கேளுங்கள்...

*****

சண்டையிட்ட நாளில்
சமாதானத்துக்குப் புறா அல்ல
கோழி

*****

கடவுள்
சாத்தான்
இடையில் நீ

*****

என் விதியை
எல்லோரும் திரும்பிப் பார்க்கிறார்கள்
நீ மட்டும் தான் திரும்பப் பார்க்கிறாய்

*****

விதிகளுக்கு அப்பாற்பட்டது உன் வீதி
மழைக்காலம் வெயிலடிக்கும்
வெயில்காலம் குளிரடிக்கும்
கார்காலம் சிறகடிக்கும்

*****

கோடு விழுந்த டிவிடி
சுழல மறுக்கிறது
உன் அருகாமை

*****

புத்தனானது எல்லாம் போதும்
கத்துகிறது
போதி வேரின் புழுவிலிருந்து ஒரு யோசனை

*****

புல்லாங்குழல் என்ற ஒற்றைச் சொல்
போதுமானது
யாருமாற்றபோது வாசிக்க

*****

அதிகாலை கோலங்களால் ஆனது
மதியம் வடகங்களால் ஆனது
மாலை நடைகளால் ஆனது
இரவு சீரியல்களால் ஆனது
உன் ஒரு நாளுக்கு நான்கு சாயல்கள்

- கவிஜி