அந்தொரு இரவில் எனை அவள் உதறிவிட்டிருந்தால்
ஆப்பிளில் மாங்காய் சுவை தேடியிருக்க மாட்டாள்
மாதங்களை அவள் எண்ணிருக்க மாட்டாள்
தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஆ/பெ யில் ஒரு கட்டமும்
அதை குறிக்கும் ஒரு பென்சிலின் நுண்ணிய நூலிழை கரித்துண்டும்
நியாய விலைக்கடையில் அரைக்கிலோ வெள்ளை சர்க்கரையும்
ஐ.நா வங்கியின் மிக மிக மிக குறைந்த கடனும் மிஞ்சியிருக்கும் இன்ன பிறவும்…

அந்தொரு பயணத்தின் மைக்ரோ வினாடியில் அந்த ஓட்டுநர் விழித்திராவிடில்
இந்த நாற்காலியும்
குளிர்சாதனப்பெட்டியில் உறையும் மிக மிக குறைந்த மதுவும்
ஒற்றை இலக்கக் காதலிகளும்
இந்த நொடி சுவாசிக்கும் உயிர்க்காற்றும்
அன்பின் நிமித்தமாய் நீங்கள் வாசிக்கும் இக்கவிதையும்
போட்டியின்றி உங்கள் வசமாயிருக்கலாம் இன்ன பிறவும்…

அந்தொரு நீடித்த இரவில் அவள் இறந்திராவிடில்
கன்னி காகிதங்களும்
இக்கவிதை எழுதிய சிறு மையும்
ஓர் ஏழையின் கடன் பத்திரத்தில் சாட்சி கையொப்பத்திற்கு உதவியிருக்கலாம்
ஒரு தற்கொலையின் காரண கடிதமாயிருக்கலாம்
ஒரு ஊமைக்காதலியின் சொல்லிய காதலாய் இருக்கலாம்
ஒரு போலி உயிலின் கையொப்பமாயிருக்கலாம் இன்ன பிறவும்…

அந்தொரு நிகழ்வு நிகழ்ந்திராவிடில்
அந்தொரு விந்தணு வேகம்கூட்டிராவிடில்
அந்தொரு ஊரில் அந்தொரு கல்லூரியில் அந்தொரு வகுப்பப்பிரிவில் அந்தொரு பெஞ்சில் அவளருகில் அமர்ந்திராவிடில்
இல்லையில்லை என் முதல் காதல் அதற்கு முன் தான் இருக்க வேண்டும்.
அந்தொரு ஊரில் ஒரு பள்ளியிருந்தது
அந்தொரு ஊரில் ஒரு தெருவும் இருந்தது
அந்த வசதியான தெருவில் என் தகப்பனின் கதவில்லா குடிசையும் இருந்தது.
ஆம் அதே ஊரில் தான் என் காதலிகளும் இருந்தார்கள்..
கோடைவிடுமுறையில் காதலிகளின் எண்ணிக்கை கூடிக்குறையும்
ஏன் கோடை எனக்கு ஒரு முறை மட்டும் நிகழ்ந்தது…
குழம்ப வேண்டாம் நிச்சயமாக எனக்கும் உங்களைப்போல் நிறைய காதலிகள்.
ஆம்.. அதான்… அந்த கேள்வி தான்..
நான் எதிர்பார்த்த கேள்வி தான்…
“எப்படி உங்களுக்கு ஒரே நேரத்தில் இத்தனை காதலிகள்?”
“நான் எப்பொழுது கூறினேன் ஒரே நேரத்தில் என்று….
நீங்கள் கேட்காத ஒன்றையும் கூறுகிறேன்
காதலியென்றால் பெண்பால் மட்டும் தானா????”

- கே.பாக்யா