முதலில் நான்
என்னோடு வாழ்கிறவன்
பிறகு
இதோ என் எதிர் முகமாய் நிற்கும்
உன்னோடு வாழ்கிறவன்.

அதோ யாரெனத் தெரியாது
இந்த நொடியில் நம்மைக் கடந்து போகும்
அந்தப் பெயர் தெரியாதவனோடும்
வாழ்கிறவன்.

இந்த நொடியில் இந்தச் சூழலில்
நீ நாம் அவன்
இதோ இது இவை எனப் பேசுகிக்கொள்கிற
உனக்கும் எனக்குமான
மொழி வார்த்தைகளுக்கு இடையிலும்
வாழ்கிறவன்.

என்னைப் பற்றிய நினைவுகள்
உன்னோடு உள்ளவரையும்
வாழ்கிறவன்.

உன்னைப் பற்றிய நினைவுகள்
என்னோடு உள்ளவரையும்
வாழ்கிறவன்.

நம்மைப் பற்றிய நினைவுகள்
பெயர்தெரியாத அவனோடு உள்ளவரையும்
வாழ்கிறவன்.

அவனைப் பற்றிய நினைவுகள்
நம்மோடு உள்ளவரையும்
வாழ்கிறவன்.

நம் காலத்தின் முரண்பாடுகள்
தடயங்களாக
தொல்லியல் எச்சங்களாக
கண்டெடுக்கப்பட்டும்
அதன் பழமை உள்ளவரையும்
வாழ்கிறவன்.

எரிக்கப்படுகின்ற மரத்தின் கரியில்
எச்சமாய் நின்ற காலத்தின்
சுவடுகள் உள்ளவரையும்
வாழ்கிறவன்.

வாழ்க்கை உடலால் அழிவதல்லவே!
இறப்பிற்குப் பின்னும்
ஒரு வாழ்க்கை
அவற்றை நம்
எச்சங்கள் வாழத்தொடங்குகின்றன!

- இல.பிரகாசம்