முதுகில் பையென
நெஞ்சில் கணக்கின்ற நினைவுகளோடு
கையசைத்துத் தொடங்குகிறது
தூரதேசம் நோக்கிய
பொருள்வயிர் பிரிவு

பிம்பம் இருளில் கரையும் வரை நின்று
தளும்பும் கண்ணீர் துடைத்து
உள்ளேறுகிறேன்

நீயற்ற இவ்வீடு
அடர்ந்த மௌனத்தையும்
அறை முழுக்க வாசத்தையும்
நிறைத்துக் கிடக்கிறது

சுனை அரும்பும்
வெக்கையை மறைக்க
உன் வேட்டியைப்
போர்த்திக் கொள்கிறேன்

தேதிகளை வெறித்தபடி
குறுகிப் படுத்திருக்கிறேன்
அணைக்க நீயற்ற இம்மெத்தையில்

மரக்கிளையிடம் விடைபெற்ற இலையொன்று
காற்றின் திசையில் ஆடி
தரையில் விழுவதைப் பார்த்தபடி
மகிழ் மாலை உலா செல்கிறது
இளம் இணைகள்.

- சிவ.விஜயபாரதி