பல்லாண்டு பொறுத்து
சிலகாலம் சிறுத்து
பாதாளம் உள்ளிருந்து
நிழலரசன் வரும் காட்சியை
குளம் குட்டை பார்க்கும்..!

ஆகாய சிறுதுளிகள்
இலைத்துளையை ஊடிச்செல்ல
சிறுகுருவி கருங்காக்கை
பின்தொடர்ந்து பாடிச்செல்லும்!

உதிர்கால விடுமுறை முற்றி
இலை தளிர்க்கும் காலங்களில்
பாசமிகு பனித்துளிகள்
படர்ந்துருகும்..!!

மரத்தினடிக்கு வருகைதரும்
வெறும்பாதமும் வெந்த பாதங்களும்
உட்காரும் பெரியோர்களும்
பரிமாறிய பழங்கதைகளை
காற்று கூறத்துவங்கும்..!!

கிளைவெட்டி மறித்துவிட்டோம்
இடி மின்னல் மழைகளை..?
மரவெட்டிகளை மறந்து
ஏற்றுக்கொண்டோம்
அரசு கூறும் பிழைகளை..!!

சூரிய ஆக்கிரமிப்பில்
அனல் போர்வை சூழ்ந்துவிட்டது
நிழல் உறங்கிய இடங்களை..!
அங்குமிங்கும் சொட்டும் சாம்பல்களை
தென்றல் கைப்பற்றி காலிசெய்திட்டது

கிளையறுத்து கிணறுவற்றி
மண்ணரிப்பால் நிழல் மாய்ந்த
இந்நொடிகள்
இக்கால சூ(வீ)ழ்ச்சிகள்

இனி எப்போது மாறுமோ
என்கையில் விதை(தி)கள்

செடியாகவோ ?? மரமாகவோ??

- அயன்கேசவன், அயன் கரிசல்குளம்