காற்றின் கதவுகள் தந்த
மீதம் காற்று
குளிர்ந்த உடலைத் தழுவியப்படி,
நினைவுகளை கலைத்துக் கொண்டிருந்தது

எதனையும் இப்போது சிந்திக்க
சாத்தியப்படவில்லை

அவ்வளவு சன்னமாக பக்கத்துவீட்டு
தொலைபேசி உறுமுவது காதுகளில் ஒலிக்கிறது

ரசனையான கவிதை தான் குறுஞ்செய்தியில்
படிக்கத் தோன்றவில்லை

இவ்வுலகில் நான் மட்டும் தனித்திருப்பதாக
கடந்து போகிறேன்

மௌனத்தைத் தவிர துணையாய் விட்டுச் சென்ற
உன் காதல் அருகில் இல்லாமலும் இல்லை

நெடிதாகி வரும் மின்னல்
காதுகளை வருடியபடி லேசான இடி

சன்னல் படபடக்கும் அதிர்வலைகளில்
வந்து வீழும் சாரலில் ஒரு துளி
கன்னங்களை வருட,
போதுமானதாய் இருக்கிறது
இந்த சுகம்
இந்த நொடி
களையத் தோன்றவேயில்லை...

- ஆனந்தி ராமகிருஷ்ணன்