lady in the morning
மன்னிக்கவும்
அலைபேசியில் அதிகாலையில்
அழைக்காதீர்!

அக்காலைப்பொழுது
என் கைகளில்
இருப்பதேயில்லை!

ஆயிரம் கரம்
கொண்டிருந்தாலும்
அதிகாலையை ஆள்வது கடினம்!

அக்காலைப் பொழுதானது
ருத்ரதாண்டவத்திற்கான
முன் ஒத்திகைக் காலம்!

அதிகாலைப்பொழுதொன்றில்
அக்காக்குருவியின் ஓசையை
நின்று கேட்டதாய் நினைவிலில்லை!

அலார ஒலியால்
மட்டும் தான்
என் அதிகாலை புலர்கிறது!

நிதானமாய் நின்று
தேநீர் அருந்தியதுவுமில்லை!
அள்ளி ஊத்தி
அடுத்த வேலைக்கு ஆயுத்தமாகிறேன்!

உங்களுள் யாரேனும்
ஒய்வாய் இருப்பின்
காலைப் பொழுதை
கடனாய்த் தாருங்களேன்!

காலை வேளையை
கண் நிறைத்து பின்
சின்னதாய்
கவிதை எழுத வேண்டும்!

- கி.பாலபாரதி