அடிக்கடி நீ செல்லும்
உன் ஊருக்குள்
அய்யனார் நான்
கையில் கத்தியில்லை
உன் கண்கள்....

வாரம் முழுக்க
உன்னை சுமக்கும் பேருந்தை
வித விதமாய் வரைகிறேன்
எல்லா ஜன்னலிலும்
எட்டிப் பார்க்கிறாய்...

நீ அனுப்பும் முத்தங்களை
சேமித்து சேமித்து
இப்போது அலைபேசி முழுக்க
உன் வாய் மொழி ..

.நீ கால் நனைத்த நதியோரம்
முதலில் மரமாகிறேன்
பிறகு வரமாகிறேன்....

அஞ்சாங்கல் விளையாட
நீ அழைக்கையில்
அத்திப் பூக்கள் நடுவினில்
நான் கல்லுக்குள் ஈரம்
பாரதிராஜா...

ஜாடை தூக்கி முன்னால் போட்டு
என் கழுத்தையும்
சுற்றி புசு புசுக்கையில்
காரிருளை கட்டி இழுக்கிறேன்....

கருவேலாங் காடுகளுக்குள்
முன்பொரு காலத்து
பச்சை மானென தாவுகிறது
நின் பொருட்டு தான் மறந்த
நம் கானல்....

முதல் நாளில் முயல் போல
முட்டுவாய்
மறுநாளில் மயிலென நகருவாய்
இடைவெளியில் கொஞ்சம் மழை சேர்ப்பாய்
திசை மறந்த நம் பயணங்கள்
முடிவதேயில்லை....