கைகளில் நுழையும் பாலை
என் முதல் சுயவரத்தின் எதிர்பார்ப்புகள்
பூக்களைப் போல
நாளின் பாதைகளை அலங்கரித்தன.
வாசமும் நேசமுமான தடங்களுடன்
என் வருங்காலக் கனவின் சுவடுகளை ஒப்பிடுகிறேன்.
தனிமையிலென் கரங்கள்
வெட்கங்களை அள்ளி மூடுகிறது.
அன்று 24 கண்களிருக்கும்,
அனைத்துச் சுழிவுகள் குறித்து
பார்வை சுழட்டி அசை போட்டபின்
என் ஒரு வாரத்தை
கழித்து வந்த அம்முதல் மறுப்பின் காரணத்தை
பக்குவம் மிகக் கலந்து ஊதிவிட்டேன்.
என் நட்சத்திரங்கள் அழகானவை
அடுத்து வந்தவர்களுக்கு மட்டும் அது
எங்கு சென்று சரியற்று போனது.
என் வீடு எப்போதும் சொர்க்கம் ஆனால்
அடுத்து வந்தவர்களுக்குதான் அளவீடானது.
இலட்சணத்தின் மறுமுனையில்
முடியாமல் கனக்கும் இலட்சங்களினால்
மனதை எடையிழக்கச் செய்தார்கள் சிலர்.
யோக்கியனொருவன் தன் காதல் சொல்லி
மறுப்பு சொல்லத் தனியாய் அழைத்து வேண்டினான்.
பிடிக்காத காதலை மறுத்த தோழியொருத்தியை
வெட்டி விட்டானொருவன்...
மீண்டும் மீண்டும் குவளைகள் நிறைந்த தட்டைக்
கைகளில் திணிப்பது மீள மீள இறுக்கும் உங்களை
போட்டுடைக்கும் ஆயுதமென நடுங்குகிறது கைகளோடு...

- முருகன்.சுந்தரபாண்டியன்