எனக்கு நிறம் கிடையாது
உடையும் நீர் போன்றவன்
உலகம் எப்பக்கமும் நீரே எனக்கு
கப்பல் எனது பேராசை
புயலும் அலையும் எனது பேராவல்
சாவுக்குள் பிறப்பது தான்
மிகவும் பிடித்தவை
எடுக்க வேண்டிய ஆயுதம்
எதுவென எவனோ உங்களைப்
போலொருவன் சொல்லிச் சென்று விட்டான்
கொஞ்சம் தலை விரிந்த கனம் நான்
ரட்சகன் போலொரு தோற்றத்தில்
சிறு துப்பாக்கி இரண்டு பெருந்துப்பாக்கி ஒன்று
என்னிடமிருக்கின்றன
ராட்சசன் என்று நீங்கள் சொல்லிக் கொள்ளலாம்
சில பல தோட்டாக்கள்
பையில் சில ரொட்டித்துண்டுகள் என்னை சுமக்கின்றன
எனதூர் பசித்த வயிற்றில் ஒற்றைக் கண்
திறந்து காத்திருக்கிறது
என்ன மொழி எனது
ரோமை எதிர்க்கும் ஹீப்ரூவாகவும் இருக்கலாம்
என்ன வழி எனது
யாதும் ஊரே யாவரும் எப்படியோ
மிச்சக்கதை எதற்கு அதோ வரும்
அந்தக் கப்பல் ஆடுகளம் எனக்கு
கொள்ளை அடிக்கப் போகும் கடல் நிறைந்த
எனக்கு பெயரும் உண்டு
உச்சரிக்க முடியாத பெரும்பயத்தில்
நீங்கள் குறுக்கும் நெடுக்குமாக
கடலை அலைக்கழியுங்கள்
மூன்று முறை கத்தப் போகும்
வட்டமிடும் கழுகு
க வி ஜி என்று செங்கடல் பிளக்கும்
சற்று நேரத்தில் வெடிக்கும் துப்பாக்கி
சத்தத்தில் சத்தியமாக என் உயிர் போயிருக்காது....

- கவிஜி