dream 450எனக்கு ஒரு கனவு
இருக்கிறது
அது எப்போதும்
ஏதாவதொன்றாய் மாறிக்
கொண்டேயிருக்கிறது
சுமை என்பது
என் அப்பாவின் வாக்கு
கஷ்டம் என்பது
என் அம்மாவின் சொல்
வெறும் பார்வையோடு சில
முத்தங்கள் என் மனைவியினுடையது
நான் கவியாகி சுற்றும்
என் காட்டுக்கு அது
பின்னிரவு சன்னலைத்
திறந்து கொண்டிருக்கிறது
வாய் அசையா பெரும் பூட்டை
திறப்பதிலேயே குறியாக
இருக்கும் நான் எப்போதாவது
என் கனவு தாண்டி விடுவதுண்டு
அங்கே என் மகனாகி
டோரா புஜ்ஜியுடன் பேசிக்
கொண்டிருக்கும் என்னிலிருந்து
மெல்ல மாறத் தொடங்குகிறது
இக் கனவின் கடைசி வரியும்
மாறி விட்ட கனவின் முதல் வரியும்....

- கவிஜி