கடைசி பேருந்துக்குள்
எப்போதும்
ஓர் அப்பா இருக்கிறார்

*****

காட்டுக்குள் நத்தை மனது
ஓடைக்குள் காட்டின் வளைவு
யானை ஆகிடத்தான் இந்தக் கனவு

*****

குழாயின்
கடைசி சொட்டுக்கும்
முதல் சொட்டுக்கும் இடையே
ஒருவரின் மறதி இருக்கிறது
ஒருவரின் ஞாபகம் இருக்கிறது

*****

ஒவ்வொரு சவப்பெட்டி
செய்யும் போதும்
அதற்குள் ஒரு குடும்பமே
மரித்துக் கிடக்கிறது

*****

நீண்டு கொண்டே போன
தண்டவாளத்தை படக்கென்று திசை
திருப்புகிறது
நேர் சென்று திரும்பிய பறவை

- கவிஜி