lady250மையிட்டு இழுத்திருந்தாள்
என்னை நீட்டும் கோடுகளில்
அடிக்கடி வளைவுகள் அவள் சிமிட்டல்

கண்களுக்குள் திராட்சை நகல்
இதழ்களுக்குள் ஏதேன் தோட்டம்
பற்கள் தெரிகையில் நான் பாதி ஏவாள்

மீதி ஏவாளின் மிச்சமென
இருந்தாள்
ஆதி செய்திட்ட அச்சு அசல் நானே

சுவர் ஆகி நிற்கையில்
சுவை கூடிப் பேசினாள்
சித்திரம் பேசுதடியில் கூடுதல் நம்பிக்கை

நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி
கண்ணம்மா அவள் சாயல்
என்னெங்கும் முளைத்த புதுசிறகில் என் கேவல்

கேட்ட அத்தனை கேள்விக்கும்
பதில் கூறிய பிறகு
இதயம் வளைந்த கேள்வியோடு மற்றொரு நான்

மனம் புரட்டும் சிரிப்பு
கணம் திரட்டும் வனப்பு
மற்றவை என்னை மறந்த கதை

முட்டிக் கொள்ளும் இடைவெளியில்
முகம் பார்த்தேன்
மூச்சு முட்டியிருக்கும் என் நிழல் தேசத்துக்கும்

கையில் குறிப்புக் காகிதம் பூத்திருந்தாள்
படக்கென வாங்கி எழுத
ஒரு கவிதை இல்லை என்னிடம்

நொடிகளில் பூத்து விட்டேன்
நோகாமல் தேவதை ஆகிப் போனாள்
கற்க வந்தவள் காதல் கற்பித்த கவிதை இது...

- கவிஜி