கவிதை ஒன்றை
தொடங்கிய அவள்
சில வரிகளிலேயே
மூர்ச்சை இழந்தாள்..
இடையில் விடப்பட்ட
கவிதை தன்னைத்
தானே எழுத தொடங்கியது ..
மிகக் கவனமாய்
மிக ஆர்வமாய்
ரசிக்கத்தக்க
தேர்ந்தெடுத்த
வார்த்தைளால்
தன்னை நிறைத்தது..
தெளிவான
அர்த்தங்களோடு
உருவெடுத்தது...
ஆகச் சிறந்த
கவிதை என்று
சிலாகித்தனர் சிலர்
அர்த்தமற்ற
கிறுக்கல் என்று
சிரித்தனர் சிலர் ..
கவிதை எதிலும்
கலங்கவில்லை
தன்னைத் தொடர்ந்து
எழுதுவதிலேயே
கவனம் கொண்டது...
உபரியாய் சில
கவிதைகளையும்
எழுதி குவித்தது..
அவற்றுள் ஒன்றையே
நீங்கள் இப்பொழுது
வாசிக்கிறீர்கள்..
என்றாவது ஒருநாள்
நீங்கள் அக்கவிதையை
சந்திக்க நேரிடலாம் ..
அந்நாளில் அது
கவிதையா
கிறுக்கலா
என்ற உங்கள்
முடிவை கூறுங்கள்..
இன்றைக்கு இந்த
உபரி கவிதை
உங்கள் பார்வைக்கு...

அருணா சுப்ரமணியன்