man on roadஉன்னைப் பிரிந்து வரும்
இந்தச் சாலை கருப்பாயிருக்கிறது
என் விருப்ப நிறங்களில்
கருப்பு எப்போதும் கருப்பு தான்...

வழக்கத்திற்கு மாறாய்
இந்தச் சாலை வேகமாய்
உருண்டு் கொண்டிருக்கிறது
சில நினைவுகளோடு....

ஆவாரம் பூக்கள்
தன் இலைகளைத் தடவி
நோயுற்ற மஞ்சளைத்
தீர்த்துக் கொண்டிருக்கின்றன...

வெற்று நிலங்களை
களைச் செடிகள் ஆக்கிரமித்துக்
காற்று வாங்கின....

வார இறுதியைப்
புழுதி சுழற்றிப்
பந்தாடிக் கழிக்கிறதொரு
கூட்டம்....

காதோடு பாடுகிறது
மனசாட்சி
காதுகளைப் பிரிந்து பாடுகிறது
நேயர் விருப்பம்.....

நாம் எடுத்துக் கொள்ளாத
ஒரு செல்ஃபியை
யோசித்தபடியே வருகிறேன்
அப்படம்
மரங்களைக் குத்தித் திணறும்
மலையைப் போல
உயிரற்றுக் கொண்டிருக்கிறது...

வேகத் தடைகள்
கனவுகளைப் போல்
தோன்றி
நிலை குலையச் செய்கின்றன...

எங்கிருந்தோ புறப்பட்டு் வரும்
சுகந்தம்
எல்லாப் பயணங்களோடும்
அரும்பும் முகத்தைத்
தருவதில்லை....

ஒரு சந்தனமல்லாத தென்றல்
திருநீறணிந்து
மரிக்கொழுந்து ஏந்தி
பேருந்தின்
சன்னலைத் திறந்துவிடுகிறது
தென்றல் போன வழி
கிளைச் சாலையாகிறது....

ஒரு நிறுத்தத்தில்
ஓரமாய் இறக்கிவிடுகிறது
இந்தச் சாலை
நான் இறங்குவேனே தவிர
நிறுத்துவேனா.....?!
நின்றபின்
பதுங்கிப் பதுங்கிப் பாயும்
ஒரு சாலையின் தந்திரமா
காதலை விழுங்கும் ?!

- புலமி