சிறு கண்ணாடித் தொட்டி
மீன்களுக்கு நடுவே
ஒன்றன் மீது ஒன்றாக
அடுக்கி வைத்திருந்த
பாறைகளுக்குள்
சிக்கிக்கொண்டிருக்கிறது
அவளது இரவு..
ஒரு உலோகத் துண்டென
சுழன்று கொண்டிருக்கும் நேரம்
சற்றுமுன் அவளது
வலப்புறத்தை இடப்புறமெனப்
பெயர்த்து விட்டிருந்தது..

அவள் வரைந்து வைத்திருந்த
ஓவியத்தில் நீருக்குள்
மூழ்கிக் கொண்டிருக்கும்
பெண்ணின் சுவாசத்திற்குள்ளிருந்து
வெளிவரும் குமிழ்கள்
ஒவ்வொன்றுக்கும் சிறு சிறு
தூண்டில்கள் செய்துவைத்திருக்கிறாள்..

பழுப்பு நிறத்தில்
தான் கண்ட கனவில்
வந்த மீன்கண்ணி ஒருத்தியை
சிறு பெட்டி ஒன்றுக்குள்
அடைத்து வைத்திருப்பதாய்த்
தன் கூண்டுப் பறவையிடம்
சொல்லிக்கொண்டிருந்த அவள்
சாவி துவாரத்தின் வழி
நகர்ந்து கொண்டிருந்த
தன் கனவை
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்..

மழைத்துளிகளுக்கு அந்தப்பக்கம்
சென்று பார்த்தால்
தன்னுருவம் நிழலின்றித்
தெரிவதாய் உரக்கச் சொன்னவள்
தன் வீட்டின் வாயில்கதவோரம்
விழுந்து கிடந்த
எரி நட்சத்திரங்களை
இப்பொழுது
சேகரித்துக் கொண்டிருக்கிறாள்..

சிறு கண்ணாடிக் குடுவை
ஒன்றுக்குள் அவள்
வளர்க்கும் வனத்தில்
நெருப்பு மூட்டிக் குளிர்
காய்ந்து கொண்டிருக்கும்
அவளது உருவத்தைப்
பார்த்துக் கொண்டே
அமர்ந்திருக்கும் அவளுக்கு
சிறு மெழுகின் வெளிச்சம்
தேவையாயிருந்தது
இந்த இரவைக் கடந்துவிட..

- கிருத்திகா தாஸ்