எங்கிருந்தோ வந்த எம்.ஜி.ஆர் முதல்வரானது பற்றியும், இங்குள்ள முதல்வர் கலைஞரின் சாதி பலம் பற்றியும் விவாதித்து இருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். இதன் மூலம் சாதிய அடிப்டையில் வன்முறையைத் தூண்டி மாநிலப் பிரிவினை வாதத்திற்கு அடித்தளம் அமைக்கிறாரா மருத்துவர் ராமதாஸ்?

உள்ளத்தில் சாதிய அழுக்கு தேங்கிக் கிடக்க, வெளியில் சுத்தமானவராகக் காட்டிக் கொள்ள, மது ஒழிப்புப்பிரச்சாரத்தைக் கையில் எடுக்கிறார். மதுவை விடக் கொடியது சாதி. மது அருந்தாமலே சாதி போதையை ஏற்றும். மது அருந்துபவரின் வயிற்றை மட்டுமே எரிக்கும். சாதிய வெறி சமூகத்தை எரித்துவிடும்.

அரசியல் பலவீனத்தைச் சரி செய்வதற்காக மீண்டும் சாதிய உணர்வுகளைத் தூண்டுவதை மருத்துவர் கைவிடவேண்டும்.

10 ஆயிரம் பேர் மட்டும் உள்ள சாதியைச் சேர்ந்த கலைஞர் ஐந்து முறை முதல்வர் ஆகி இருக்கிறார் என்கிறார் மருத்துவர். கலைஞர் சாதியத்தெம்பில் அரசியலில் முகம் காட்ட வில்லை. சாதி, மத ஒழிப்பு பிரச்சாரம்தான் கலைஞரின் அரசியல் நுழைவாக இருந்தது. தன்னை சாதியப் பிரதிநிதி யாகக் காட்டிக் கொள்வதை விடத் தமிழனாக வாழ்வதில் உறுதியாக இருந்தார் அவர்.

எங்கிருந்தோ வந்த பிள்ளையாக எம்.ஜி.ஆர் இருந்தாலும், இங்குள்ளவர்களின் வீட்டுப்பிள்ளையாக வாழ்ந்தார். அதனால் மக்களின் ஆதரவினைப் பெற்றார். இது போன்றவர்களின் பலம் அவர்களின் சாதியால் வரவில்லை.

கலைஞர், எம்.ஜி.ஆர் முதல்வரானது பற்றி விவாதித்து இருக்கும் ராமதாஸ் செயலலிதா பற்றி வாய் திறக்கவில்லை. அவர் பார்ப்பனிய சத்திரிய வம்சத்தில் உயர்ந்த முதல்தர சாதி என்பதாலா அல்லது அவரது சாதிக் கணக்கு மருத்துவருக்குத் தெரியவிலலையா?

மருத்துவர் அவர்களே ! சாதியம் ஒழிய மருந்து கண்டுபிடியுங்கள்.அது உங்கள் அரசியலுக்கு உதவும். சாதிய உணர்வுகளைத் தூண்டாதீர்கள்.

- மு.தணிகாசலம்

Pin It