moon and stars

நிலா தான் தட்டு
---------------------------------
சரியாக சாப்பிடாமல்
இப்படித்தான் சிதறி கிடக்கிறது உன் தட்டென
மகளிடம் நட்சத்திரங்களைக் காட்டுகிறேன்.
நிலாதான் தட்டாப்பா எனும் மகள்
அம்மாவிடம் திட்டு வாங்காமலிருக்க
நிலா கூடவே பாட்டியிருக்காங்கலப்பா என்கிறாள்
நட்சத்திரங்கள் எல்லாம் பாட்டி பேத்திக்கிடையே
பருக்கைகளாக சிரித்துக் கிடக்கிறது இப்போது.

மாதிரி நதி
------------------------
புத்தகத்தில்
விழுந்து தெறித்து பூத்துக் கிடக்கும்
கரையை விட்டு
எழுந்தோடிக் காட்டி
நிஜமாவே இப்படிப்
போகுமாப்பா நதியெனக் கேட்டு
வளைந்து வளைந்து
நதியாகவே திரும்பும் மகன்
தன் மாதிரி நதி செய்யக் காட்டுவதற்காவது
நிஜமென ஒரு நதி
இருந்திருக்க வேண்டும் நமக்கு.

- முருகன்.சுந்தரபாண்டியன்