பகலை வெளிச்சமென நம்புகிறது உலகு
இருட்டடிப்புகள் நிறைந்த
எரியூற்றில் ஒளிரும் சூரியனை
விளக்கென்று தான் ஏந்தி வருகிறது
பூமியின் மறுபக்கம்....

வெயிலுக்குக் குடை பிடித்துச்
செல்கிறாள் ஒருத்தி
அவள் குடைக்குள் வட்டமாகச்
சுற்றிவருகிறது இருளின் ராட்டினம்...

அவளோடு பின்தொடரும்
அந்த இன்னொருவர் யாரென்று
விசாரித்துப் பாருங்கள்
நிழலென்று நிஜமுரைப்பார்...

அவள் தெருவில் உள்ள வீடுகளில்
பூமரங்கள் சுற்றுச் சுவரை மீறி
கிளைபரவித் தாவுகின்றன
தரையில் உதிர்ந்திருக்கும்
பூக்களும் இலைகளும்
கரிய வண்ணத்தில் தான்
படர்ந்திருக்கின்றன...

இரவொன்று இனி நேரும்
அங்கு மொத்தமாய் தன்னை
இழக்கும் கருவறைகள்
வெளிச்சமென நம்பியிருப்பதோ
நிலவொளியினை....

மின்சாரங்களை அறுத்தெரிந்துவிட்டு
விளக்குகளைக் காப்பாற்றும்
அதீத வீடொன்றின்
கொல்லைப்புற இருண்மையில்
விவரமறியாது மலர்ந்திருக்கிறது
இரவல் வெளிச்சமாய் மின்மினியும்....!

- புலமி