வருவாள் எனத் தெரியும்
எப்படியும் வந்து விடுவாள்
என நம்பினேன்
வந்துதான் ஆக வேண்டும்
என விரும்பினேன்
வருவதுதான் அவள்
விருப்பம்
வந்து முன் நின்று
முறைக்கவோ சிரிக்கவோ
வந்தே தீர்வாள் அவள்
வந்து விடுவதில்தான்
அவளின் இருத்தல் இருந்தது
இந்த வழியே வருவாள்
அந்த வழியே வருவாள்
எந்த வழியிலும் வருவாள்
காத்திருந்தேன் கனிந்திருந்தேன்
ஒரு கணத்தில் வந்து விட்டாள்
சோகம் சிரிப்பு இரண்டுமாக
ஏறிட்டேன்
வந்துதான் இருந்தாள்
வந்தவள் அவளில்லை
என்பதைப் போல
ஆம்
வந்துதான் இருந்தாள்
ஆனால் அவளில்லை
வந்தவள்.....

- கவிஜி