கடக்கும் வழியில்
படிந்திருக்கும் கறைகள்
உங்களுக்கு ஒட்டிக்கொள்ளாத வரை
கவலையற்றிருக்கிறீர்...

எங்கோ படர்ந்திருக்கும்
அதனழுத்தச் சிவப்பு அழுகையின் கனம்
உங்களுக்கு வேலை வைக்காத வரை
நமக்கென்னவென கடந்து போகிறீர்

உங்கள் பாவத்திலிருந்து பறக்கும் தூசி
உங்கள் பக்கத்தில் படியாத வரை
தூசி என்றால் பறக்குமென
திருப்பி கொள்ளுமாறு கடந்து விட
கல்லால் ஆன மனதிலிருந்து
எதற்கும் உதவாக் கைகள் முளைக்கிறது

நீங்கள் நாகரிகமென
ஒதுங்கி அல்லது ஒதுக்கி விட்டவைகள்
பழமை சேர்ந்து கிடக்கிறது உரமாக

உங்கள் கைகளும்
செயல்களை மீட்டும் செடிகளை நடாமல்
சுற்றுச்சுவரால் மூடிக்கொண்டு
பார்வை படாது பார்த்துக் கொள்கிறது

அதன் பொருட்டே பாய்கிறது
துயர் செழித்த கருப்பு நதி

அறிவறிந்து அதீதம் கண்ட பிடிப்பால்
விசத்தோடு முளைக்கிறது உணவு

உங்களுக்கான நீந்துதல் மட்டும்
முக்கியப்படுகையில்
மற்றவர் உயிரைத் துடுப்பாக்குகிறீர்

நிழலின்றி காய்கிறது
பழைய பச்சை மரம்
மேலும் சில வெள்ளை மனம்

உங்கள் பாதைகள் செம்மைப்படுகையில்
விலங்குகள் வீதி வசம் அடைகிறது

நீங்கள் ஏறி மிதிக்கும் வலி பொறுக்காது
குழைந்து சரிகிறது நிலம்

குளிர்மலைக் கண்ணீராக
கடல் நீர், துயரமாகக் கரிக்கிறது
பாவத்தோடு கரையை விழுங்கிறது
விரியும் தாகம்

நீண்டு வரும் அலைகள் எவ்வளவு
நாட்களுக்கு கால்கள் நனைக்கும்

கூறு போட்டதில் மீந்து
துவண்ட நிலத்தில்
ஏதும் முளைக்காத நாளோடு
ஒரு நல்ல சுவாசிப்பும்
எங்கிருந்தோ விலைக்கு வரும்

எதுவும் எட்டாத நமக்கு
தாகமென்பதற்கு நீர் என்பது
இருக்கும் வரை சிறப்பு..

- முருகன்.சுந்தரபாண்டியன்