என்றோ ஒரு நாள்
கற்பாலத்தினருகே கண்டெடுத்த
தூரிகை கொண்டு
இளஞ்சிவப்பு நிறத்தில்
இரண்டு கண்ணீர்த் துளிகளை
வரைந்து கொண்டிருக்கிறேன்
இப்போது.. மேலும் கீழும்
கொஞ்சமாய் அலையும் துடுப்புகளினோடு
கொஞ்சம் விடுபட்டுப் போன
சிறு அலைகள்
என் வலப்பக்க நாசிக்குள்
நெருப்புமிழ்ந்து விட்டுக்
கடந்து போய்ப் புகுந்து கொண்டது
இளஞ்சிவப்பு கண்ணீர்த்
துளிகளுக்குள்..
காடென்று பெயரிட்டுச்
சின்னச் செடியொன்றை
சிறு கோப்பைக்குள்
வளர்த்து வந்தேன் முன்பு.. 
கோப்பை நுனியிலிட்ட
சிறு துளை வழி
காடெங்கிலும் வழிந்தது
மணல் தட்டிய துடுப்பின் வாசம்..
இன்னும் எனக்கு
நினைவிலுண்டு
என் கைப்பைக்குள்
பத்திரப்படுத்தியிருந்த
ரோஜா இதழின்
நுனி மென்மைக்குள்
கூர் கத்தியொன்று
ஒளிந்திருப்பதாய்க்
கற்பனையொன்று
வந்து சென்ற நாளில் தான்
நான் கற்பாலத்தினருகே
தொலைத்து விட்டிருந்தேன்
என்
இளஞ்சிவப்பு நிறக்
கண்ணீர்த் துளிகள் இரண்டை..

- கிருத்திகா தாஸ்