காலர் நைந்துபோன சட்டைகளும்
கீழ்முனை தேய்ந்துபோன பேண்டுகளும்
இத்துப்போன சேலைகளும்
நிறைந்திருக்கும் நெகிழிப்பை
தயாராய் இருக்கிறது
இல்லாதோருக்கு வழங்க.

நேற்று வைத்து மீந்துபோன 
வத்தகொழம்பு
கெட்டுப்போகும் முன்
வேலைக்காரிக்கு கொடுத்தாயிற்று.

படிக்க தகுதியற்ற
குப்பை புத்தகங்களை
ஜிகினா பேப்பர் சுற்றி
அன்பளிப்பாக வழங்கியாயிற்று
பலருக்கு.

ஊர்காட்டில் விளைந்த 
கத்தரியும் வெண்டையும்
போன வாரம் வந்து போன
வேலு மாமா தந்து போனதை
வதவிப்போகும் முன்
எதிர் வீட்டிற்கும்,அண்டை வீட்டிற்கும்
நட்பு பாராட்டி கொடுத்தாயிற்று.

அரசு கொடுத்த விலையில்லாப்
பொருளை பாதி விலைக்கு
விற்ற காசில் மிஞ்சிய ஐநூறை
ஏரியாவின் சித்திரைத் திருவிழாவிற்கு
நன்கொடையாக எழுதியாயிற்று.

நம்புங்கள் 
நாங்களும்
தர்மப் பிரபுக்கள்தான்.

- இ.தாஹிர் பாட்சா, அரும்பாவூர்.