அரவமற்ற வனமொன்றின்
பேரமைதியில் 
கேட்பாரற்றுக் கிடந்த
நடுகல் தெய்வமென 
கன்னியிருந்தாய் காதலோடு
மகரந்தம் வீசிய உன்னை நுகர்ந்தபடி
தீண்டிட நீண்ட பசுமை மேவிய 
கிளைகளில் வெட்டுண்டு 
வேலிகளைக் கடந்து வீசப்பட்டிருக்கிறேன்
மேற்பறந்த காகங்களின் எச்சங்களால்
வெளுப்பேறிய உனதங்கங்களை
பலியாடுகளின் இரத்தத்தால் சிவப்பாக்கியிருந்தனர்
ஓங்காரத்தோடு பேரிறைச்சலாய்
உச்சியில் விழுந்து வேரில் சில்லிடும்
ஒற்றை மழைத் துளியாய் வருவேன்!

- ப.செல்வகுமார்