அருங்கொடையின் நிறைமாதம்
மண் வியர்க்க
புழுதி பறந்த பொழுதில்
கால்நடையாகி பசிவயிறுடன்
களைத்துத் திரும்புகின்றன
தொழுவத்திற்கு மந்தைகள்
 
தக்க காப்பின்றி
பூஞ்சணம்படிய
குலைந்திருக்கும்
வைக்கோல்போரிலிருந்து
எழுகிற நாற்ற வாடை
மந்தைகளின் பசியை
நாசிக்குள் குமட்டலாய்
அசைபோட வைக்கிறது
 
மேய்ச்சல்தரை
எழுத்து மங்க வாசிக்க முடியா
வெற்றுக்காகிதமாய்
பசும்புல் கனவில் மிதந்தலைந்து
திரும்பும் கணம்
கணுவுக்கு நகர்த்த
ஈமொய்க்கும் கன்றின் விழிகாண
தாய்மைக்குள் சுரக்கிறது இரக்கம்
 
சீர்கேட்டில் விசாரிக்கும்
இடையன் குறி
பால்பூத்த காம்புகளில்
தொக்கி நிற்க
நுரைத்தெழும் செம்புகளுக்காக
அலையும் மனம்
திருகுதாளமாய்
காற்றில் விடுகிறான்
இடைக்காலப் பாடலொன்றை
 
தன்பசியே பெரிதென்றெண்ணி
தடவியபடி தேடுகின்றன விரல்கள்
அடி மண்டிக்காக எச்சில் சுரக்க
கன்றின் பசி கண்களில் இறங்குகிறது
இறுக சுருக்கும் வடமென!
 
- ரோஷான் ஏ.ஜிப்ரி