சந்தையில் நெருக்கடி இல்லை எனினும்
சிந்தையில் விடுதலை வேண்டும் என்றே
வினைஞர் அரசை அமைத்திடும் வழியை
முனைந்து தெளியேல் இழிவே அன்றோ?
நெருக்கடி தோன்றி வருத்தும் காலையில்
வரும்பொருள் உரையேல் அதனினும் இழிவே
கூடுத லாகப் புவி¦ப்ப உயர்வால்
ஓடுது உலகம் அழிவுப் பாதையில்
தடுத்து நிறுத்தும் சமதர்மம் என்றே
எடுத்துக் கூறேல் இழிவின் எல்லையே

(முதலாளித்துவப் பொருளாதார முறையில் நெருக்கடி தோன்றாமல் சீராகச் சென்று கொண்டு இருக்கும் பொழுதே கூட, (அம்முறையில் உழைக்கும் மக்களுக்குச் சுதந்திரம் இல்லை என்பதால்) சிந்தனையில் சுதந்திரம் வேண்டும் என்பதற்காக, உழைக்கும் மக்களின் (சோஷலிச) அரசை அமைத்திடும் வழியை மக்களிடம் எடுத்துக் கூறித் தெளிய வைக்காமல் இருப்பது இழிவாகும். நெருக்கடி தோன்றி வருத்திக் கொண்டு இருக்கும் பொழுது (மக்கள் அமைதியுடன் வாழ சோஷலிச அரசு அமைவது ஒன்றே வழி என்று) எதிர்காலத்தைப் பற்றி எடுத்துக் கூறாமல் இருப்பது மேலும் இழிவாகும். மேலும், (புவி வெப்பத்தை உயர்த்தும் பொருட்களையே உற்பத்தி செய்யுபடி சந்தை விதிகள் வற்புறுத்தும் உற்பத்தி முறையால்) இவ்வுலகம் அழிவுப் பாதையை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்துவதற்கு (புவி வெப்பத்தை உயர்த்தும் பொருட்களை உற்பத்தி செய்யாமல் தடுக்கவும், புவியைக் குளிர்விக்கும் பொருட்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கவும் வலிமை கொண்ட) சோஷலிச உற்பத்தி முறையினால் மட்டுமே முடியும் என்று எடுத்துக் கூறாமல் இருப்பது இழிவின் எல்லையாகும்.)

- இராமியா